Thursday, July 24, 2014

கைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்’ என்பது வாய்வழக்கில் உள்ள ஒரு வாக்கியம். பறந்துபோகக்கூடிய பத்து குணங்களைப் பட்டியலிட்டு  ஒளவையார் ஒரு வெண்பா எழுதியிருக்கிறார். அவை எல்லாமே பசிக்கு ஆட்பட்டுத் தவிக்கிறவர்கள் ஒவ்வொன்றாக துறப்பதற்குச் சாத்தியமான குணங்கள். ஆனால், வரலாற்றில் ஒரு காலகட்டத்தில், துறப்பதற்கு ஒன்றுமே இல்லாதவர்களாக பசித்தவர்கள் காக்கை குருவிகளைப்போல செத்து விழ, அந்தப் பஞ்சத்துக்குக் காரணமானவர்கள் அந்த மரணங்களுக்கும் தமக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லாதவர்கள் போல நடந்துகொண்டார்கள். ஒளவையார் சுட்டிக்காட்டிய பத்து குணங்களில் பாதிக்கும் மேலான குணங்கள் அவர்களிடமிருந்தே பறந்துபோயின. முரண்களின் தொகையான அச்சம்பவம் நமது தமிழக வரலாற்றில் ஒரு பெரிய கறை. நமது மூதாதையர்களின் சமூகம் மனசாட்சியில்லாமலும் நீதியுணர்ச்சியில்லாமலும் நடந்துகொண்ட விதம் நம்மைத் தலைகுனிய வைக்கிறது. கண்ணுக்குமுன்னால் செத்துக்கொண்டிருக்கும் ஓர் உயிரை, காப்பாற்ற இயலாத கையறு நிலையில் பார்க்க நேர்வதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், காப்பாற்றுவதற்கான எல்லா வழிகளும் இருந்தும்கூட, காப்பாற்ற மனமில்லாமலும் கைதூக்கிவிட விருப்பமில்லாமலும் இருந்ததை ஒரு கொலைக்குற்றத்துக்குச் சமமானதாகவே புரிந்துகொள்ளமுடிகிறது. நம் முன்னோர்களின் சமூகம் ஒரு கொலைகாரச்சமூகமாகவே வாழ்ந்திருக்கிறது. சாதி என்னும் குறுவாளோடு வாழ்ந்த அச்சமூகத்தின் முகத்தை வெள்ளை யானை நாவலில் ஜெயமோகன் அடையாளப்படுத்தியிருக்கிறார். வரலாற்றில் மறைந்துபோன அல்லது மறைக்கப்பட்ட ஒரு கொடுமையான சம்பவத்தை ஜெயமோகனின் எழுதுகோல் வெள்ளை யானையாகத் தீட்டிக் காட்டியிருக்கிறது.
பிரான்சிஸ் டே என்பவரால் தெலுங்கு மன்னரிடமிருந்து விலைக்கு  வாங்கப்பட்டு, கிழக்கிந்தியக்கம்பெனியின் நிர்வாக மையமாக உருவாக்கப்பட்ட மதராஸபட்டினம் மெல்லமெல்ல வேலை வாய்ப்புகளுக்கான இடமாகவும் இருந்தது. நிலங்களோடு கட்டிப் பிணைக்கப்பட்டிருந்த மேல்சாதி மக்களைவிட, எல்லாச் சாதியினர்களாலும் ஒடுக்கப்பட்டு, இழப்பதற்கு எதுவுமில்லாத தலித் மக்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்காக  புதிய பட்டினத்தில் குடியேறத் தொடங்கினார்கள். நேர்மையில்லாத ஆட்சியாளர்களும் மனசாட்சியில்லாத மேல்சாதிக்காரர்களும் சுயலாபத்துக்காக, தலித்துகளின் உழைப்பைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இவ்விரண்டு கூட்டங்களின் கூட்டணியால் உருவான செயற்கைப்பஞ்சத்தில் உண்ண உணவில்லாமல் அவர்கள் கும்பல்கும்பலாகச் செத்து மட்கி  மண்ணோடு மண்ணானார்கள். எஞ்சிய ஒருசிலர் ஒருவாய் உணவுக்காக, முப்பது டன் எடையுள்ள பனிப்பாளத்தை அறுத்துத் துண்டுகளாக்கும் வேலையில் ஈடுபட்டு, உயிரோடு நடைப்பிணமானார்கள். எல்லா விளிம்புகளிலும் மரணத்தையே சந்தித்தது தலித் சமூகம். மனசாட்சியே இல்லாதவர்களுக்கு நடுவே நிகழ்ந்த அக்கரிய தருணத்தை மனசாட்சியுள்ள எய்டன் என்னும் கற்பனைப்பாத்திரத்தின் வழியாக சித்தரித்துக் காட்டியுள்ளார் ஜெயமோகன்.
ஐஸ் ஹவுஸ் என்பது மதராஸபட்டினத்தில் ஃபிரடெரிக் டியுடர் அண்ட் கம்பெனி இயங்கிய இடம். வெள்ளை ஆட்சியாளர்களின் விருந்தறைகளில், அவர்கள் அருந்தும் மதுவோடு கலப்பதற்காக லண்டன் நகரத்திலிருந்தே பனிப்பாளங்கள் கப்பல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டது. ஆறுமாத பயணத்திலும் கரைந்துவிடாதபடி, உயர் குளிர்நிலையில் பக்குவப்படுத்தப்பட்ட அந்தப் பாளங்கள் ஐஸ் ஹவுஸில்தான் இருட்டறைகளில் வைத்துப் பாதுகாக்கப்பட்டிருந்தன. மாபெரும் அவ்வெள்ளைப் பாறைகளை உடைத்துத் துண்டுகளாக்கி மரப்பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பும் வேலையைச் செய்ய, பஞ்சத்துக்காக ஊரைவிட்டு வந்த தலித் தொழிலாளிகள் ஈடுபடுத்தப்பட்டார்கள். எந்த விதமான பாதுகாப்புக்கருவிகளும் அவர்களிடம் இல்லை. சாதாரண கடப்பாறைகளாலும் மண்வெட்டியாலும் வெட்டியெடுத்துத் துண்டுகளாக்கினார்கள். மரணத்துக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்த அத்தருணத்தில் அவர்களிடயே அசாதாரணமான ஓர் எழுச்சி உருவானது. முதல் உரிமைக்குரல் அந்தத் தொழிலாளர்களிடையே எழுந்தது. தமக்குக் கிடைத்த சிறு தகவலை ஆதாரமாகக் கொண்டு 1878 ஆம் ஆண்டையே மறு உருவாக்கம் செய்து காட்டியிருக்கிறார் ஜெயமோகன். ஒருபக்கம் மக்களெல்லாம் வெளியேறுவதற்குக் காரணமான தாதுவருஷப் பஞ்சத்தையும் இன்னொரு பக்கம் ஐஸ் ஹவுஸ் சம்பவத்தையும் இணைத்து நெய்து, ஒரு வரலாற்று நாவலை எழுதியிருக்கிறார்.
தமிழ்மண்ணில் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தை, பல்வேறு வரலாற்றுத் தருணங்களின் தொடர்ச்சியாக கட்டமைத்திருக்கும் ஜெயமோகனின் கலைநுட்பம் பாராட்டுக்குரியது. இச்சமூகம் காலம் காலமாக மூடிவைத்திருந்த இரட்டைவேடத்தை இந்த நாவல் கலைத்து, அம்பலப்படுத்திவிடுகிறது.
ஒரு காலத்தில் உலகத்தையே கொள்ளையடித்துக் கொழுத்திருந்தது பிரிட்டிஷ் பேரரசு. தன் அருகிலிருந்த அயர்லாந்து  மண்ணையும் அது விட்டுவைத்ததில்லை. எய்டன் அங்கே பிறந்தவன். மாபெரும் உணர்ச்சிக்கவிஞனான ஷெல்லியின் வரிகளை மனத்தில் ஏந்தி வளர்ந்தவன் அவன். தன்னைச் சுற்றியும் மலர்ந்துவிட்ட புரட்சிகரச் சமூகங்களைப்பற்றித் தெரிந்துகொண்டவன். எல்லாவற்றுக்கும் மேலாக மனசாட்சி உள்ளவன். அப்படிப்பட்டவனுக்கு பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஆளாக இந்தியமண்ணில் காலடி எடுத்துவைக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவன் பொறுப்பேற்றுக்கொண்ட காலகட்டத்தில் ஐஸ் ஹவுஸ் சம்பவம் நிகழ்வதுபோல, புனைந்து செல்கிறார் ஜெயமோகன். ரட்சிக்கும் கடமை அதிகாரத்துக்கு உள்ள தலையாய கடமை என நம்பிச் செயலாற்றும் அவனை, நிர்வாகமும் நிர்வாகத்தின் அச்சுகளாக உள்ள சுயநல மனிதர்களும் செயல்படவிடாமல் தடுப்பதில் வெற்றி காண்கிறார்கள். நிர்வாகத்தின் மனசாட்சியைத் தூண்டி, ஆபத்தில் உள்ள மனிதர்களைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, பஞ்சத்தை நேருக்குநேராகக் கண்டு இரவெல்லாம் கண்விழித்து அவன் எழுதிக் கொடுத்த குறிப்புகள், அவன் எதிர்பார்த்த ஒரு பயனையும் அளிக்கவில்லை. மாறாக, தந்திர மனம் கொண்ட நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக நகரைச் சுற்றி கால்வாய்களையும் கட்டடங்களையும் உருவாக்கத் தேவையான அனுமதியைப் பெறுவதற்கு அக்குறிப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. அந்தத் திட்டத்தில் கைமாறப் போகிற தொகையைப் பற்றிய கனவுகளில் திளைக்கத் தொடங்கிவிடுகிறது.
பாதிக்கப்பட்ட தொழிலாளிகள்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக புறநகரில் உள்ள சேரிக்கும், பஞ்சத்தைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதற்காக செங்கல்பட்டுக்கும் எய்டன் பயணம் செய்யும் காட்சிகள் முக்கியமானவை. மோசமான நிலையில் உள்ள குடிசைகளையும் அவர்களுடைய வறுமையான சூழலையும் சாலையோரங்களில் விலங்குகள்போலச் செத்துக்கொண்டிருக்கும் மக்களின் கோரமான குரல்களையும் எய்டனின் கண்கள் வழியாக நம்மைப் பார்க்கவும் உணரவும் செய்கிறார். உயிர்ப்புத்தன்மை மிகுந்த ஜெயமோகனின் சித்தரிப்புமொழி அக்காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டியிருக்கின்றன. தொர தொர என்று குரலெழுப்பியபடி கைநீட்டும் கரிய உருவம். உட்குழிந்த கண்களால் வெறித்துப் பார்த்தபடி இறுதிமூச்சை விடும் எலும்பும் தோலுமான உருவம். குழந்தையின் பிணத்தை இழுத்துக் குதறித் தின்னும் நாய்களின் கூட்டம். வீசப்படும் ஒரு ரொட்டித்துண்டை எடுக்க கூட்டம்கூட்டமாக முட்டிமோதி ஒருவரையொருவர் கடித்துக்கொள்ளும் மனிதர்கள். ஒவ்வொரு காட்சியும் ஓர் ஓவியமாக  எழுத்தில் உறைந்துவிடுகிறது.
எய்டன் இரண்டு முக்கியமான பாத்திரங்களோடு இந்த நாவலில் உரையாடும் சூழல் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று காத்தவராயனின் பாத்திரம். இன்னொன்று முரஹரி ஐயங்காரின் பாத்திரம். ஒன்று தாழ்த்தப்பட்ட சாதியின் குரலாக துணைநிற்கும் பாத்திரம். இன்னொன்று, சாதியமைப்பில் மட்டுமன்றி, ஆட்சியமைப்பிலும் முக்கியமான எல்லா லாபங்களையும் ஈட்டிக்கொண்ட உயர்சாதியின் குரலாக துணைநிற்கும் பாத்திரம். காத்தவராயனின் குரல் மனசாட்சி உள்ள எய்டனிடம் மட்டுமே எடுபடுகிறது. முரஹரி ஐயங்காரின் குரல் ஐஸ் ஹவுஸ் நிர்வாகம், ஆட்சி நிர்வாகம் என எல்லா இடங்களிலும் எடுபடுகிறது. பஞ்சங்களால் கூட்டம்கூட்டமாக செத்துவிழும் மனிதர்களைப்பற்றிச் சொல்லும்போது, அவர்களுடைய முற்பிறப்புகளில் செய்த பாவங்களுக்கு கடவுள் வழங்கிய தண்டனையே அந்த மரணம் என கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாமல் அவரால் சொல்லமுடிகிறது. குதிரைவீரர்கள் தலித் தொழிலாளர்களிடையே எதிர்பாராத கணத்தில் புகுந்து தாக்கி விரட்டி வீழ்த்தும் காட்சியை, சிறிதளவும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஒரு கூட்டுப்புணர்ச்சிக் காட்சியைக் காணும் உவகையோடு கண்டு களிக்கிறார். அவருடைய பாவபுண்ணிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டு யோசித்துப் பார்த்தால், அவர் கண்குளிரக் கண்டு ஆனந்தப்படும் அக்காட்சி, அவர் தன் முற்பிறவியில் செய்த புண்ணியத்துக்கு கடவுள் அருளிய விருது என அவர் நினைப்பதாகத் தோன்றுகிறது. தலித் மக்கள் சகமனிதர்களாலும் கைவிடப்பட்டவர்கள். கடவுளாலும் கைவிடப்பட்டவர்கள்.
ஐஸ் ஹவுஸ்  போராட்டக் காலத்தின் அசல்தன்மையை, மனம் ஒப்பும் விதத்தில் எழுத்தில் வடித்துள்ள ஜெயமோகன் பாராட்டுக்குரியவர். அவர் புனைந்திருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் முக்கியமானதாக உள்ளது. அதன் நம்பகத்தன்மை கேள்விக்கு அப்பாற்பட்டதாகவே அமைந்திருக்கிறது. ஆதம் ஆண்ட்ரூ மனத்தைத் தொட்டுவிடும் முக்கியமான ஒரு பாத்திரம். உயர்ந்த வேலையில் அமர்வதற்காக கல்கத்தாவுக்குச் செல்லவேண்டியவன் விதிவசத்தால் செங்கல்பட்டுக்கு வந்து சேர்கிறான். தான் ஊழியம் செய்யவேண்டிய இடம், மரணங்கள் மண்டிய அந்த இடம்தான் என உறுதியோடு சொல்லி இறங்கிச் செல்கிறான். வேலையமர்த்தலாணைக் கடிதத்தை அவன் கைகள் காற்றில் வீசி எறிகின்றன. அவன் கால்கள் கதறியழும் அந்த மக்களை நோக்கி நடக்கின்றன. மக்களின் மரணங்களை ஒரு புள்ளிவிவரமாக மாற்றி பதிவேட்டில் குறித்துக்கொண்டு அறிக்கை தயாரித்து அளிக்கும் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்குள் இயங்கும் மனசாட்சி, அவனை இறைநிலைக்கு உயர்த்திவிடுகிறது. மனத்தைவிட்டு நீங்காத மற்றொரு பாத்திரம் மரிஸா. ஆங்கில இந்திய இளம்பெண். பாதிரியாரின் ஆதரவால் ஆங்கிலம் கற்றவள். சொந்த ஆர்வத்தின் காரணமாக இலக்கியமும் கற்றவள். அதிகாரிகளின் களைப்பை நீக்கி இரவுத்துணையாக வாழ்ந்து பிழைப்பவள் என்றாலும் அவளுக்குள் பொங்கிப் பீறிடும் தன்மான உணர்ச்சி அவளை மிக உயர்ந்த அன்னையாக மாற்றிவிடுகிறது.  ஆண்ட்ரூ, மரிஸா போன்ற கற்பனைப்பாத்திரங்களூடே, உண்மைப்பாத்திரத்தின் சாயலுடைய காத்தவராயனும் இடம்பெற்றிருக்கிறான். மாபெரும் தலித் சிந்தனையாளராக பிற்காலத்தில் மலர்ந்த அயோத்திதாசரின் இளமைப்பருவத் தோற்றத்தோடு அவன் காணப்படுகிறான். எதார்த்தத்தை அவன் விளங்கிக்கொள்ளும் விதத்திலும் எய்டனுக்கு விளக்கிச் சொல்லும் விதத்திலும் பக்குவமும் மேதைமையும் ஒருங்கே தென்படுகிறது. தன் குலச்சின்னத்தை அவன் துறப்பதற்கான மனநிலையை, ஐஸ் ஹவுஸ் மரணங்கள் உருவாக்கியதாகப் புனைந்துள்ள தருணம் பொருத்தமாக உள்ளது.  வரலாற்றில் மனமாற்றத்துக்கான தருணங்கள் எப்போதும் இப்படிப்பட்ட மரணத்தருணமாகவே உள்ளது. பிணங்கள் புரண்டுகிடக்கும் போர்க்களத்தைக் கண்டு மனம் மாறும் அசோக சக்கரவர்த்தி பெளத்த தர்மத்தைப் பின்பற்றத் தொடங்கியதை யாராலும் மறக்கமுடியாது. காத்தவராயனும் ஐஸ் ஹவுஸ் மரணங்களை அடுத்து, பெளத்த தர்மத்தை ஏற்றுக்கொள்பவனாக மாறுகிறான். ஆனால், அது அசோகன் நினைத்ததுபோல அஹிம்சையையும் அமைதியையும் வேண்டியதாக அல்லாமல், சாதிநிலைகளின் இரக்கமற்ற தன்மையைச் சகித்துக்கொள்ளமுடியாமல், சாதிகள் அல்லாத ஓர் உலகத்தின் பிரஜையாக தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்கிற ஆவலின் காரணமாக மாறுகிறான். குதிரைவண்டியோட்டி, காவல்காரன், ஐஸ் ஹவுஸ் மேற்பார்வையாளன் எல்லோருமே அரசு நிர்வாகத்தை அண்டிப் பிழைப்பவர்கள். அவர்களுக்குள் இயங்கும் சாதியுணர்வு மூச்சுக்காற்றுபோல இயங்கிக்கொண்டே  இருக்கிறது. 1878 காலகட்டத்துச் சூழலை கண்முன்னால் நிகழ்த்திக்காட்ட, பரிவேதுமில்லாத இரும்புமனம் கொண்ட அத்தகு பாத்திரங்கள் பலர் நாவலில் இடம்பெற்றுள்ளார்கள்.
கைவிடப்பட்ட கூட்டதினரிடையே பரிவோடு நடந்துசெல்ல ஆண்ட்ரூ போல எய்டனால் இயலவில்லை. தன் முயற்சிகள் தோல்வியுற்றதைத் தாங்கிக்கொள்ள இயலாமலும் தன் மனசாட்சிப்படி நடக்க இயலாத சுயவெறுப்பிலும் அவன் தற்கொலையை நாடுகிறான். உயிர்பிழைத்து எழுந்த பிறகு, நிர்வாக வசதிக்காக அவன் இடமாற்ற ஆணையை ஏற்று தென்காசிக்குச் செல்லவேண்டியிருக்கிறது. அங்கு நடைபெறும் இரவுவிருந்து நிகழ்ச்சி ஒரு முக்கியமான காட்சி. ஆளும் வர்க்கத்தாரின் மனநிலைகளையும் சுயநலப் போக்குகளையும் நேர்த்தியான உரையாடல் காட்சிவழியாக உணர்ந்துகொள்ளும்படி செய்திருக்கிறார் ஜெயமோகன். அங்கு நடைபெறும் மதுவிருந்தில் கோப்பைகளில் நிரப்பப்படுகிற மதுவில் பனிக்கட்டித் துண்டுகள்  கலக்கப்படுகின்றன. தன்னைநோக்கி நீளும் கோப்பையை வாங்கி ஒரே மூச்சில் அருந்தும் நிலைக்கு ஆளாகிறான் எய்டன்.
மனசாட்சியில்லாத சொந்த சமூகம் தமக்காக உழைக்கும் மக்களை மனிதர்களாகவே கருதாமல் சாதி என்னும் பெயரால் ஒதுக்கி நசுக்கி வீழ்த்துகிறது. ஆட்சி செய்யவந்த அயல் இன அதிகார வர்க்கமோ, சுயநலத்துக்காக அவர்களை சுத்தமாக கைவிட்டுவிடுகிறது. நாவலைப் பிரித்துப் படிக்கும் ஒவ்வொருமுறையும் அவமான உணர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் பொங்கியெழுவதைத் தடுக்கமுடியவில்லை.

http://puthu.thinnai.com/?p=26047

Tuesday, July 8, 2014

போதையில் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
விடுமுறை நாளில் அமர்ந்து பிடித்தவருக்கு கடிதம் எழுதுவதன் சுகத்தை அனுபவித்தமுந்தைய தலைமுறையின் நீட்சியாகவே இதை ஆரம்பிக்கிறேன். ஒரு எழுத்தாளனை -படைப்பு ரீதியாக- விமர்சிக்க அனேக விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கெல்லாம் படிக்க வேண்டும். படிப்பதற்கு நேரமும் இல்லாமல் விருப்பமும் இல்லாமல் அந்த எழுத்தாளன் சொன்ன ஒரு வரியைவடிவேலு வசனத்துடன் கிண்டல் செய்யும்போர்க்குணம் இல்லாதஇளைய சமுதாயத்தின் மீது எனக்கு கோபம் இருந்தால் அது வானம்பார்த்துநான் எச்சில் துப்பிக் கொள்வதற்கு சமானம். ஆனால் எந்த எழுத்தாளனையும்ஏறி மிதிப்பதற்கு முன் அவன் எழுதிய ஒரு புத்தகத்தையாவது எங்கள் ஆட்கள் படித்து விட வேண்டுமென்றுதான் தினமும் பூண்டி மாதாவிடம் வேண்டிக்கொள்கிறேன். குறிப்பாக உங்கள் விஷயத்தில் காவடி ஆட்டம் ஆடும் மழைக் காளான்களுக்கான பிரார்த்தனை ஒரு பொருத்தனையோடு என்னிடம் தொக்கி நிற்கிறது.
விஷயத்திற்கு வருகிறேன், ‘என் வீட்டில் யாருமில்லை வா குடிக்கலாம்’என ஒருவர் அழைத்தார் -நண்பர்களிடம் இப்படியொரு அழைப்பு வந்தால் இந்த மனம் ஏன் முதன்முறை பறக்கும் பறவையைப் போல சிறகடிக்கிறது- என்னுடைய மாதக் கடைசி நிலவரத்தை அறிந்தவராய்தரமான ரம் மற்றும் அதற்கு தேவையான தொடுகறியை எல்லாம் வாங்கி வைத்துத்தான் என்னை அவர் அழைத்திருந்தார். அதைப்பார்த்தவுடன் கண்ணீர் மல்கநண்பருடைய உச்சந்தலையில் முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது. சரி, இந்தக் கடிதம் எதைப்பற்றி என்று பற்களைக் கடிக்காதீர்கள். எந்த ஒரு கதையையும் நேர்க்கோட்டில் சொல்லாமல் தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும் என்கிற தோஷம்உங்களிடமிருந்துதான் வந்தது. தவிர, இப்போது நான் குடித்திருக்கிறேன். அரை மணி நேரம் குடை ராட்டினத்தில்தொடர்ந்து சுற்றி விட்டு கீழே இறங்கியது போல கிறுகிறுவென்று இருப்பதால்என்ன எழுதிக் கொண்டிருக்கிறேன் என்கிற பிரக்ஞை இல்லை.போதிலும் ஒருவாறாக சமாளித்து சொல்லவந்ததை சொல்லிவிட்டு தூங்கி விடுகிறேன்.
நண்பரும் உங்களைப் போன்ற ஒரு எழுத்தாளர் என்பதால் அவர் உடல் இப்போது கொண்டிருக்கும் போதையை தன்னுடைய முதுகுத்தண்டில் யாரோ பொம்மை கார் ஓட்டுவது போல இருக்கிறதென்றுஉவமையோடு சொன்னார். பிறகுசெல்போனை காதில் வைத்தபடி அறையை விட்டு வெளியே சென்று விட்டார்.நான் இக்கணம் தனிமையில் இருக்கிறேன். நாற்காலியில் அமர்ந்தபடி கண்களை மூடாமல் இமைகளை மட்டும் மூடினேன். இம்மாதிரியான போதையில் காதலிகளை நினைத்து பொறுமுவது எனக்கு சலிப்பாகி விட்டது. ஒரு மாறுதலுக்கு இன்று முடித்த உங்களுடைய“வெள்ளை யானை” நாவலை அசை போட ஆரம்பித்தேன். சொல்வதற்கு சில விஷயங்கள் இருக்கிறது அதைப் பற்றி உங்களிடம் பேசி(யே) விடலாமா என்று நப்பாசையில் பாதி கண்ணில் உங்கள் நம்பரை செல்போனில் தேடினேன். இல்லை. ஒருவேளை நான் பேசினாலும் அது உங்களுக்கு புரியாதுகாரணம் என்னுடைய பேச்சில் கொழகொழப்புத்தன்மை இப்போது அதிகம் இருக்குமென்று என்னால் உணர முடிகிறது. போதை.
சரி, சொல்ல வந்ததைசீக்கிரம் சொல்லி விடுகிறேன்பிறகு நண்பர் வந்தவுடன் நகுலன், லா.ச.ரா என பேசி ஆட்டோகிராப் சேரன் போல விசும்ப ஆரம்பித்து விடுவார்.
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “எனது இந்தியா” என்கிற தடித்த வரலாற்று புத்தகத்தை முழுதும் படித்திருக்கிறேன். அதில் சென்னை ஐஸ் ஹவுஸ் பற்றி அவர் எழுதிய பத்து பக்கத்தில் ஐஸ் ஹவுஸ் தொழிலாளர்கள் செய்த வரலாற்று சிறப்பு மிக்க வேலை நிறுத்தத்தைப் பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. போலவே தினத்தந்தியில் வந்து கொண்டிருந்த “வரலாற்றுச் சுவடுகள்” பகுதியிலும் அதைப்பற்றி படித்த ஞாபகங்கள் இல்லை. தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட (இந்தியாவிலேயே முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்)சம்பவத்தை நூலாய்ப்பிடித்து நாவல்நெய்திருக்கிறீர்கள்.இதுவேவெள்ளை யானையிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம்.
கூடவே கதை சொல்லியாய் நீங்கள் தேர்ந்தெடுத்த ஹெய்டன் பாத்திரம்.தாழ்த்தப்பட்டவர்களை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்நூலில் அவர்கள் யாரையும் பேசு பொருள் ஆக்காமல் அவர்களை அடிமை செய்யவந்த வெள்ளைக்காரன் பார்வையில்மொத்தகதையும் நகர்வது அயர்ச்சியை தவிர்த்தது.தன் காதலி மரிஸாவை சந்திப்பதற்கு முன் ஹெய்டன் தனக்குளே பேசிக்கொள்ளும் வார்த்தைகள் தன்னிலை உணர்தலின் உச்சம். (பக்கம்-366)
தாதுப்பஞ்சத்தின் கோராமையைபிரதிபலிக்க முயன்று தேவையற்ற விவரணைகளால் இருநூறு பக்கம் நாவல் நானுறு பக்கம் தொட்டிருக்கிறது. நாவலை எழுத ஆரம்பிப்பதற்கு முன்பு இதை இத்தனைப் பக்கம்தான் எழுத வேண்டுமென்று கல்கத்தா காளியிடம் சத்தியம் செய்துவிட்டு ஆரம்பிப்பீர்களா என்கிற சந்தேகம் படிக்கும்போது இடையிடையே எழுந்தது.
வெள்ளை யானை வெளிவந்தவுடன் சுடச்சுட படித்துவிட்டு கேலி, கிண்டல்செய்தஇலக்கியவாதிகளை ஏனோ ஒருசாதி அடையாளத்துடனேயே இப்போது நினைத்துப் பார்க்க தூண்டுகிறது. அதே சமயம் இது தலித் நாவல் என்று சொன்னால் நீங்களே சிரிப்பீர்கள். படித்துமுடித்தவுடன்எந்த பச்சைக் குருதியின் வாசனையையும் நான் உணரவில்லை.
அத்தோடு நாவலின் பின் அட்டையில் இந்த அழிவுக்கு நாம்தான் கூட்டு பொறுப்பு ஏற்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறீர்கள். அது யாருக்கு? நம்மை ஆண்ட பிரிட்டிஷாருக்கா? நான் உயர்சாதி என்று-ஏதோ ஒரு வகையில்-பீத்தலோடு அப்போதிலிருந்து இன்றுவரை இருக்கும் ஆரியர்களுக்கா? அல்லது நாவலை படிக்கும் தலித்துகளும் ஆசனவாயில் ஊசி குத்துவது போல உணர்ந்து கூட்டுப் பொறுப்பு ஏற்க வேண்டுமா?
எல்லா விஷயத்தையும் தொட்டுவிட வேண்டும் என்கிற பிராயசையில் தலித்துகளை வைத்து ஒரு புத்தகம் எழுதி இருக்குறீர்கள். போதிலும் இதையாவது எழுதி இருக்குறீர்களே என்று ரம் நாற்றம் அடிக்கும் வாயோடு உங்கள் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டுக் கொள்கிறேன்.குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்று நினைக்காதீர்கள் ஜெமோ, இது கொஞ்சம் காஸ்ட்லி ரம்.
நன்றி
தமிழ்ப்பிரபா.
அன்புள்ள தமிழ்ப்பிரபா,
போதையில் கடிதம் எழுதியிருக்கிறீர்கள். வாசித்ததும் போதையிலாக இருக்காதென நம்ப விழைகிறேன்.
எந்தப்பக்கத்திலிருந்தும் நாவலுக்குள் வாசல் திறந்து நுழையலாம். நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து நுழைந்திருக்கிறீர்கள். நாவலைப்பற்றி நீங்கள் கேட்பவற்றுக்கெல்லாம் நாவலிலேயே விடை உள்ளது.போதையிலிருந்து மீண்டபின் இன்னொருமுறை வாசிக்கலாம், யோசிக்கலாம்
நாவலின் கருவே தாதுவருஷப் பஞ்சம்தான். அது மொத்தநாவலிலும் ஒரே அத்தியாயத்தில் வெறும் இருபது பக்கங்களுக்குள்தான் சொல்லப்பட்டுள்ளது.
நான் உயர்ந்த சாதி என எண்ணிக்கொள்பவர்கள் ஆரியர்கள் மட்டும்தான் என்று உயர்ந்தசாதி ரம்மின் புட்டிமேல் எழுதப்பட்டிருக்காதென்று நினைக்கிறேன்.
‘நாம்’ என்பது நான் இன்னசாதி என தன்னை அடையாளப்படுத்தி, இன்னாரைவிட மேல் என உணரும் அனைவரும்தான். அதில் தலித்துக்களும் அடக்கம் என்பதே என் எண்ணம்.
[போதையில் உள்ளவர்களைச் சேர்க்கமுடியுமா என்று தெரியவில்லை. அவர்கள் தனி சாதி என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதற்குள் நால்வருண அமைப்பு வேறுமாதிரி என்று சொன்னார்கள். ஸ்காட்ச், காஸ்ட்லி ரம், டாஸ்மாக்,சுண்டக்கஞ்சி என்று]
‘சுடச்சுட’ வாசித்துவிட்டு மறைவாக பழங்கதைகள் சொல்பவர்களின் பிரச்சினையை நானும் அறிவேன். கருத்துக்களைச் சொல்லி விவாதிக்க அதற்கான தன்னம்பிக்கையும் ரசனையும் வாசிப்புப்புலமும் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக உயர்ந்தசாதி ரம்மும் அதை அவ்வளவாக அளிப்பதில்லை.
எப்படியோ நீங்கள் வாசித்துமுடித்ததிலும் எழுதியதிலும் மகிழ்ச்சி. இன்னொருமுறை ஆங்காங்கே நினைவூட்டிக்கொள்ளவாவது முடிந்தால் அந்நாவல் பேசும் அதிகாரத்தின் இயக்கவிதிகளை, பின்னிச்செல்லும் படிமங்கள் மூலம் முன்வைக்கப்படும் தரிசனத்தை நீங்கள் கண்டுகொள்ளவும்கூடும்.
இன்னும்பிற நாவல்களையும் இதேபோல வாசித்துவீட்டீர்கள் என்றால் ஒரே அறக்கேள்வியைத்தான் அனைத்தும் வெவ்வேறு கோணங்களில் அணுகுகின்றன என்றும் காண்பீர்கள். அது ஏய்டனின் சிக்கலென்ன, அவன் யார் என அறிய உதவும்.
எதற்கும் ஒருமுறை மற்ற மூன்று வகைளுடன் நாவலை வாசித்துப்பாருங்கள்.
நன்றி
ஜெ

வெள்ளை யானை : பரிவுணர்ச்சியின் பிரமாண்டம்- சுகுணா திவாகர்

‘வெள்ளை யானை’ நாவலைப் படிப்பதற்கு முன் ஜெயமோகனின் முன்னுரையைப் படித்தது என் தவறுதான். அந்த முன்னுரையைப் படித்து முடித்தபிறகு. பக்கச்சார்பான அரசியல் தீர்ப்பெழுதும் அந்த முன்னுரை, நாவல் குறித்த முன் தீர்மானத்தை உருவாக்கிவிடும் என்ற பயம் எழுந்தது. முன்னுரையில் ஜெயமோகன் சொல்லியிருக்கும் விஷயத்தின் சாராம்சம் இதுதான் :


1921ஆம் ஆண்டில் சென்னை பின்னி மில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. அதுதான் இந்தியாவின் முதல் தொழிற்சங்க வேலைப்போராட்டம் என்று கருதப்படுகிறது. அந்தப் போராட்டத்தை காங்கிரஸ், நீதிக்கட்சி, இடதுசாரிகள் ஆதரிக்க, தலித் தலைவரான எம்.சி.ராஜாவோ, ‘‘தலித் தொழிலாளர்கள் அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது’’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து வேலைக்குப் போன தலித் தொழிலாளர்களை மற்ற தொழிலாளர்கள் தடுத்து நிறுத்த, மோதல் வெடித்தது. ‘புளியந்தோப்பு கலவரம்’ என்றழைக்கப்பட்ட அந்தத் தாக்குதலில் தலித் மக்கள் பெருவாரியாக வாழ்ந்த புளியந்தோப்புப் பகுதி குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. ஏராளமானவர்கள் இறந்தார்கள். இதைப் பற்றி திரு.வி.க. தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார். ‘தலித்துகள் சென்னையின் மய்யப்பகுதியில் குடியிருப்பதுதான் கலவரத்துக்குக் காரணம்’ என்று கருதிய நீதிக்கட்சி சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் தலித் மக்களைக் குடியேற்றியது. ‘புளியந்தோப்பு தலித் குடியிருப்பு முழுமையாகவே காலி செய்யப்பட்டது. அங்கே முஸ்லீம்களைக் குடியேற்றுவது வழியாக இது நிகழ்த்தப்பட்டது. இன்று அது ஒரு முஸ்லிம் குடியிருப்பு’ என்கிறார் ஜெயமோகன். ஏன் தலித்துகள் இந்தப் போராட்டத்தைப் புறக்கணித்தார்கள் என்கிற கேள்வியில் இருந்துதான் ‘வெள்ளை யானை’ நாவலுக்கான புள்ளி தொடங்குகிறது. தலித் அறிஞரும் தொடர்ச்சியாக திராவிடர் இயக்கத்தைத் தலித் மக்களுக்கு எதிர்நிலையில் நிறுத்தி விமர்சித்து வந்தவருமான அன்பு பொன்னோவியத்துடனான ஜெயமோகனின் உரையாடல்தான் இந்த நாவலுக்கான விதை. ‘‘1878ல் சென்னை ஐஸ் ஹவுஸில் நடந்த வேலை நிறுத்தம்தான் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தம். அதை மேற்கொண்டது தலித்துகள். ஆனால் அது இடைநிலைச் சாதி கங்காணிகளாலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாலும் முறியடிக்கப்பட்டது. அதைப்பற்றி திரு.வி.க. ஓரிரு வரிகள் எழுதியிருக்கிறார்’’ என்று ஜெயமோகனிடம் சொன்ன அன்புபொன்னோவியம், அதற்கான ஆவணங்களைத் தேடுவதாகவும் சொல்லியிருக்கிறார். அந்த ஐஸ் ஹவுஸ் போராட்டத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் அடிப்படையில்தான் பின்னி ஆலை வேலைநிறுத்தத்தைத் தலித்துகள் புறக்கணித்தார்கள் என்பது அன்பு பொன்னோவியத்தின் அனுமானம். மேலும் ஐஸ் ஹவுஸ் போராட்டத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பு இருந்திருக்கலாம் என்பதும் அவரது அனுமானம்.  இது ஜெயமோகன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். நீதிக்கட்சி என்பது முற்றுமுழுதான முற்போக்கு விழுமியங்களைக் கொண்ட கட்சி அல்ல. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்கள் வேலை வாய்ப்புகளிலும் அதிகார மய்யங்களிலும் பெற்றிருந்த அதிகப்படியான வாய்ப்புகளுக்கு எதிராக எழுந்த ஒரு கட்சி. பார்ப்பனர்களைப் போலவே பார்ப்பனரல்லாதோருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதையே முக்கியக் கோரிக்கையாகக் கொண்ட கட்சி. கட்சியின் தலைமையில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மேட்டுக்குடி பணக்காரர்கள். எம்.சி.ராஜா, சிவராஜ் போன்ற தலித் தலைவர்களும் இருந்தார்கள். திரு வி.க.வின் பின்னி ஆலை வேலை நிறுத்தம் குறித்த குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் இயக்கத்தின் மீது இதற்கு முன்பும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு ஏற்பட்ட செல்வாக்கு அன்றைய காங்கிரஸிலும் பிரதிபலித்தது. காங்கிரஸும் தன்னை முற்றுமுழுதான பார்ப்பனக் கட்சி அல்ல, பார்ப்பனரல்லாதார் நலன்கள் குறித்து தங்களுக்கும் அக்கறை உள்ளது என்று காட்டிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நீதிக்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் ஆதரவில் ‘சென்னை மாகாண சங்கம்’ என்ற பார்ப்பனரல்லாதார் சங்கம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. அந்த சங்கத்தின் முக்கியமான மூன்று தலைவர்கள் ஈ.வெ.ரா.பெரியார், வரதராஜுலு (நாயுடு) மற்றும் திரு.வி.க. பல காங்கிரஸ் கூட்டங்களில் இவர்கள் மூவரும் பேசியபிறகுதான் ராஜாஜி பேசுவார் என்று பெரியார் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். ஒருகட்டத்தில் காங்கிரஸ் முற்றுமுழுதான பார்ப்பனர் கட்சி என்ற முடிவுக்கு பெரியாரும் வரதராஜுலுவும் வந்து சேர்கிறார்கள். சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் குறித்து பெரியார் கொண்டு வந்த தீர்மானம் தொடர்ச்சியாக காங்கிரஸ் மாநாடுகளில் தோற்கடிக்கப்பட்டவை ஆகியவை அவர்களை இந்த முடிவுக்குக் கொண்டுவந்தது. காங்கிரஸ் மாநாடுகளிலேயே பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனி சமையல் நடந்தது என்றால் காங்கிரஸில் பார்ப்பன ஆதிக்கம் எந்தளவுக்கு வெளிப்படையாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். கடைசியாக காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பெரியாரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் விவாதத்துக்கே எடுத்துக்கொள்ளப்படாதபோதுதான் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறுகிறார். அந்த காஞ்சிபுரம் மாநாட்டின் தலைவராக இருந்தவர் திரு.வி.க. பெரியார், வரதராஜுலுவைப் போல காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் நலன்களைப் புறக்கணிக்கிறது என்பதைத் திரு.வி.க. புரிந்துகொண்டாலும் தொடர்ந்து அவர் காங்கிரஸ்காரராகவே நீடித்தார். காந்தியின் தலைமை மற்றும் தேசிய விடுதலைப் போராட்டம் ஆகியவற்றின் மீது அவருக்கிருந்த நம்பிக்கை அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். தொடர்ச்சியான நீதிக்கட்சி எதிர்ப்பாளராக இருந்த திரு.வி.க.வின் பின்னி வேலை நிறுத்தம் குறித்த குறிப்புகளில் இந்தப் பக்கச்சார்புகள் பிரதிபலித்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் நீதிக்கட்சியின் ஆட்சியே ஒட்டுமொத்தமாகத் தலித் விரோத ஆட்சி என்று சொல்லிவிடமுடியாது. ‘பஞ்சமர்கள் பேருந்துகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என்றே அக்காலத்தில் பயணச்சீட்டுகளில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அப்படிப் பயணச்சீட்டுகளை வினியோகிக்கும் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசாணை கொண்டுவந்தது நீதிக்கட்சி ஆட்சிதான்.

இத்தனையும் சொல்வதற்குக் காரணம் நீதிக்கட்சி குறைகளற்ற முற்போக்குக் கட்சி என்று நிறுவுவதற்கோ தலித்துகளை வெளியேற்றிய நீதிக்கட்சியின் செயல்பாடுகளை நியாயப்படுத்துவதற்கோ அல்ல. வரலாற்றில் தனக்குத் தேவையான சம்பவங்களைப் பிய்த்தெடுத்து, தோதான தீர்ப்பு எழுதுவது சரியானதுதானா என்று பரிசீலனை கோருவதற்குத்தான். மேலும் நீதிக்கட்சி வெளிப்படையாகவே பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்த கட்சி. அது ஏன் பிரிட்டிஷாரைப் பகைத்துக்கொண்டு தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஆதரிக்க வேண்டும், தலித்துகளுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இதற்கு திரு.வி.க.வின் சில குறிப்புகளை மட்டும் வைத்து முடிவுக்கு வராமல் மேலும் பல தரவுகளைச் சேகரித்து விரிவாக ஆராய வேண்டும். ஜெயமோகனே தன் முன்னுரையில் ‘‘நீதிக்கட்சியினர் உறுதியான பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் என்பதையும் எம்.சி.ராஜாவேகூட நீதிக்கட்சியில் பணியாற்றியவர் என்பதையும் கருத்தில் கொண்டால் பல குழப்பங்கள் வருகின்றன’’ என்கிறார். இப்படி பல ‘குழப்பங்களுக்கு‘ இடையே அவர் ஒரு ‘தெளிவான‘ முடிவுக்கு வருவதுதான் ஆச்சர்யம். அந்த முடிவு :

‘‘தலித் அரசியலும் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடத் தேசிய அரசியலும் கொள்ளும் முரண்பாடு அதன் ஆரம்பப்புள்ளியிலேயே இவ்வாறு வலுவாக வெளிப்பட்டுவிட்டபோதிலும்....’’ என்பது.

முதலில் நீதிக்கட்சி தமிழ்த் தேசியக் கட்சி அல்ல. அன்றைய சென்னை மாகாண நிலையைப் பிரதிபலிப்பதுபோல மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், தமிழர்கள் நிறைந்திருந்த கட்சி. திராவிட அடையாளம் என்பதும் நீதிக்கட்சிக்கு முன்பே உருவான ஒன்று. அத்தகைய அடையாளத்தை முன்வைத்தவர்களும் தலித்துகளே. இந்த வாக்கியமே அடிப்படையில் பிழையானது. எனக்கு இங்கே இன்னொரு முக்கியமான கேள்வி எழுந்தது. ஒரு தொழிலாளர் போராட்டம் முதன்முறையாக உருவாகும்போது எந்த அதிகாரமும் அற்ற தலித்துகள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதுதான் இயல்பு. ஒரு நிறுவனமயப்பட்ட தொழிற்சங்கத்தின் வேலைநிறுத்தப்போராட்டத்திலினின்று ஏன் தலித்துகள் விலகிப்போனார்கள் என்பதுதான் வரலாற்றில் மிக முக்கியமான புள்ளி. வர்க்க அடையாளமும் சாதி அடையாளமும் முரண்படுகிற புள்ளியில் இருந்துதான் இந்த வரலாற்றாய்வு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அது ஏன் நீதிக்கட்சி எதிர்ப்புப் புள்ளியிலிருந்து தொடங்குகிறது? ஜெயமோகனின் ‘வெள்ளையானை’ நாவலைக் கொண்டாடுகிற தலித் அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் திராவிட அரசியலையும் பெரியாரியக்கத்தையும் தலித் அரசியலுக்கு எதிர்நிலையில் இருந்து விமர்சிப்பவர்கள். அதற்கான ஒரு அரசியல் வசதியாகத்தான் இந்த நாவல் கொண்டாடப்படுகிறது என்பதுதான் சூட்சுமம். 

எம்.சி.ராஜாவும் தலித் தொழிலாளர்களும் பின்னி வேலை நிறுத்தப் போராட்டத்திலிருந்து ஏன் விலகினார்கள் என்பதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். 1878ல் நடந்த ஐஸ் ஹவுஸ் வேலை நிறுத்தப்போராட்டத்தில் தலித்துகளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான் இதற்குக் காரணம் என்பது அன்பு பொன்னோவியத்தின் அனுமானம். அவ்வளவே. அதேபோல் அயோத்திதாசர் இந்தப் போராட்டத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டார் என்பதற்கும் எந்தத் தரவுகளுமில்லை. இதுவும் அன்பு பொன்னோவியத்தின் இன்னொரு அனுமானம். எனவே ‘வெள்ளை யானை’யை ஒரு வரலாற்று நாவல் என்று சொல்வதைவிட, அனுமானங்களின் மீது எழுப்பப்பட்ட வரலாற்றுப் புனைவு என்று சொல்லலாம். ஆனால் அனுமானங்களின் அடிப்படையில் ஒரு வரலாற்றுப் புனைவு எழுதுவது தவறு கிடையாது. ஏனெனில் வரலாற்றெழுதியலில் அனுமானங்களின் பங்கும் கணிசமானவை. இந்த நிலைகளை ஏற்றுக்கொண்டு ‘வெள்ளை யானை’யை மதிப்பிடலாம். ஆனால் முன்னுரையில் பின்னி வேலை நிறுத்தம், நீதிக்கட்சி குறித்தெல்லாம் ஜெயமோகன்  எழுதியிருக்கிறாரே தவிர, நாவல் அதைப்பற்றியது அல்ல. அது பஞ்சம் மற்றும் ஐஸ் ஹஸ் வேலை நிறுத்தத்தைப் பற்றியது. மேலும் முன்னுரையின் அடிப்படையில் நாவலை மதிப்பிடுவதோ முன் தீர்மானத்தோடு ஒரு நாவலை அணுகுவதோ வாசிப்பு அறம் அல்ல என்ற புரிதலோடு நாவலைப் படிக்கத் தொடங்கினேன்.

உண்மையில் நாவலின் முதல் அய்ம்பது பக்கங்கள் அப்படியே வாசகர்களை வாரிச் சுருட்டி உள்ளிழுத்துக்கொள்கின்றன. ஏய்டனின் பாத்திரப் படைப்பு மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அயர்லாந்து கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனாக, அதேநேரம் பிரிட்டிஷ் இந்தியாவில் தன் பின்னணியை மறைத்துக்கொள்ளும் வசதி கொண்ட ராணுவ உயரதிகாரியாக, இந்தியச் சாதியமைப்பின் புதிர்களை விளங்கிக்கொள்ள முடியாதவனாக, அது எல்லா அதிகாரங்களுக்கும் மேலாக இருப்பதைக் கண்டு மிரள்பவனாக, ஷெல்லியின் எழுத்துகளில் தோய்ந்துபோகிற கவித்துவ உள்ளத்தினனாக, ஏழைகளுக்கு இரங்கும் அதே நேரத்தில் சாரட்டில் இருந்து கீழே இறங்குவதற்கு ஓர் ஏழையின் முதுகைப் பயன்படுத்துவதில் உறுத்தல் இல்லாதவனாக, மரிஸாவிடம் காதலும் அதிகாரமும் பிரதிபலிப்பவனாக.....என பன்மைத்துவம் கொண்ட மிகச்சிறந்த பாத்திரமாக ஏய்டனை ஜெயமோகன் உருவாக்கியிருக்கிறார். ஏய்டனின் மனவோட்டங்களும் கூட மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. ஏய்டனின் அயர்லாந்து வாழ்க்கை குறித்த சித்தரிப்புகள், ஒரு மொழிபெயர்க்கப்பட்ட செவ்வியல் நாவலைப் படிக்கும் உணர்வைத் தந்தது. அயர்லாந்திலிருந்து விடைபெறும் முன்பு, ஏய்டனுக்கும் அவனது தந்தைக்குமான கணங்கள் கவித்துவமானவை. 

‘ஆழமான பெருமூச்சு விட்டாலும் மனத்தின் எடை குறையவில்லை’ என்ற வரியைப் படித்ததும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, சில நிமிடங்கள் அந்த வரியைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அந்த வரி என்னை ரொம்பவே பாதித்தது. நாவலின் பல பக்கங்களில் உள்ள ஏய்டனின் மனவோட்டம், புத்தகத்துக்குள்ளிருந்து இரண்டு கண்கள் நம்மை உற்றுப்பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தந்தன. அப்படியொரு கச்சிதமான பிரதிபலிப்பாக இருந்தது. அயர்லாந்து வாழ்க்கை, பலரும் குறிப்பிடுவதைப் போல செங்கல்பட்டுக்குச் செல்லும் வழியில் பஞ்சத்தைப் பற்றிய சித்தரிப்புகள், வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்க்கும்போது பஞ்சத்தில் இறந்துகொண்டிருப்பவர்கள் நினைவுக்கு வரும் காட்சி ஆகியன குறிப்பிடத்தக்கன. அதேபோல் நாவலின் கடைசி அத்தியாயமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக டாக்டர். சிம்ஸன் பாத்திரம். ஒருவேளை வெள்ளையானையின் அடுத்த பாகத்தை ஜெயமோகன் எழுதுவதாக இருந்தால் சிம்ஸன் பாத்திரத்திலிருந்து தொடங்கலாம் என்பது என் கருத்து.

ஆனால் நாவலின் தொடக்கப்பகுதியில் ஈர்க்கும் வருணனைகளும் விவரிப்புகளும் போகப்போக வாசிப்புச் சுமையாக மாறுகின்றன. ஒருகட்டத்தில் அலுப்புமேலிட, தேவைக்கு மேலான வர்ணனைகள், விவரிப்புகளைத் தவிர்த்துவிட்டு, கதையின் அடுத்த கண்ணி எங்கேயிருக்கிறது என்று தேடிப் பிடித்துப் படிக்கத்தொடங்கினேன். ஒரு கறாரான எடிட்டிங்கை மேற்கொண்டால் இந்த நாவலில் 100 முதல் 150 பக்கங்கள் வரை நீக்கலாம். ஆனால் எனக்கு புரியாத புதிராக இருந்தது நாவலில் காணப்படும் தலித் பாத்திரச் சித்தரிப்புகள். 

தலித் வரலாற்று நாவல் என்று சொல்லப்படுகின்ற, 408 பக்கங்கள் கொண்ட ‘வெள்ளையானை’யில் பெயரும் அடையாளமும் கொண்டு, பேசக்கூடிய தலித்துகள் மூன்றே மூன்றுபேர்கள்தான், காத்தவராயன், ஜோசப் மற்றும் கருப்பன். நாவலில் நூற்றுக்கணக்கான தலித்துகள் இருக்கிறார்கள். ஆனால் அத்தனையும் உடல்கள். பஞ்சத்தில் இறந்துகொண்டிருக்கிற உடல்கள் மட்டுமல்ல, ஐஸ் ஹவுஸில் பணிபுரிகிறவர்களும் உடல்கள்தான். எந்த உரையாடலும் உணர்ச்சிகளும் வாழ்க்கையின் நுட்பமான தருணங்களுமற்று உடம்பில் கொஞ்சம் சதையோடும் கண்களில் கொஞ்சம் ஆன்மாவுடனும் ஜெயமோகன் எழுத்துகளில் பதியப்படுவதற்காக ‘தொர தொர’ என்று இறைஞ்சிக்கொண்டிருப்பவர்கள். மூன்றே மூன்று தலித் பாத்திரங்களும்கூட, ஏய்டன், மரிஸா பாத்திரங்களுடன் ஒப்பிடும்போது எந்தவித பன்முகத் தன்மையும் அற்று, ஒரே அச்சில் வார்க்கப்பட்ட தட்டையான பாத்திரங்களாக இருக்கிறார்கள். பண்ணையார்களை நோக்கி எம்.ஜி.ஆர். பேசும் வசனங்களையொத்த மொழிகளைப் பேசுகிறார்களே தவிர வலியின் நுட்பமோ வாழ்வின் சிக்கலோ இழையோடும் மொழி இல்லை. அழகியபெரியவன், இமையம், பாமா போன்ற தலித் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தவர்களுக்குத் தெரியும் இந்தப் பாத்திரங்களில் விடுபட்டிருக்கும் தலித்தியல்புகள்கள். மேலும் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலில் மாற்றுத்திறனாளி பிச்சைக்காரர்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள், வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்கள்கூட, பாவம் ஐஸ் ஹவுஸ் தொழிலாளர்களுக்கு வாய்க்கவில்லை. ஐஸ் அவுஸ் போராட்டம் குறித்த சித்தரிப்புகளும் ‘ஊருக்குள் ஒரு புரட்சி‘ சு.சமுத்திரத்தின் எழுத்தின் தரத்தைத் தாண்டவில்லை. நீளநீளமான விவரிப்புகளுக்கும் வர்ணனைகளுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், ஏய்டனின் பாத்திரத்தை உருவாக்குவதில் காட்டிய சிரத்தையை ஏன் தலித் பாத்திரச் சித்தரிப்புகளில் ஜெயமோகனால் செலுத்தமுடியவில்லை என்பது விளங்கவில்லை.

அதேபோல் மரிஸா பாத்திரத்தின் ‘திடுக்கிடும் திருப்பக்’ காட்சி. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து தற்காலம் வரை ஆங்கிலோ இந்தியச் சமூகம் பிற சமூகங்களுடன் பெரிதும் உறவுகளற்றதாய்த்தான் இருக்கிறது. ‘சட்டைக்காரிகள்’ என்று பிற சமூகங்கள் ஏளன மொழியில்தான் ஆங்கிலோ இந்தியர்களை அழைத்துவந்திருக்கிறது. ஆனால் மரிஸா, ‘‘என்றைக்கு நீ என் மக்கள்மீது காலைவைத்து மிதித்து இறங்குவதைக் கண்டேனோ அன்றே நான் உன்னைப் புரிந்துகொண்டேன்’’ என்று ஏய்டனிடம் சீறுவது அசல் சினிமாத்தனம். அவர் எப்படி தலித்துகளோடு தன்னைப் பொருத்தி உணர்கிறார்? அதற்கான அறிகுறிகளும் தர்க்கமும் நாவலில் இல்லவே இல்லை. இதேபோல் ஐஸ் ஹவுஸ் அதிகாரி பார்மரின் குணமாற்றமும் இன்னொரு செயற்கைத்தனம்.

நாவலில் நாயுடுகள். செட்டியார்கள், கோமுட்டிச் செட்டிகள், ரெட்டியார்கள், கொஞ்சம் பார்ப்பனர்கள் ஆகியோர் குறித்தும் அவர்களது ஆதிக்கம் குறித்தும் சித்தரிப்புகள் வருகின்றன. ஆனால் ஏய்டனின் மனவோட்டத்திலும் சரி, பிற பாத்திரங்களின் உரையாடலிலும் சரி இந்துமதச் சட்டகம் குறித்த எந்த உரையாடல்களோ சித்தரிப்புகளோ இல்லை. ஏய்டனுக்கும் பாதர் பிரண்ணனுக்கும் இடையிலான உரையாடல்களில்கூட இல்லை. இருவருமே கிறித்தவர்கள். ஒருவர் கிறிஸ்தவ மதப் போதகர். ஆனால் இந்துமதம் குறித்த எந்த உரையாடல்களும் ஏனில்லை? பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பஞ்சத்தில் செத்துக்கொண்டிருக்கும்போது துறைமுகங்களின் வழியாக பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு உணவுப்பொருட்கள் போய்க்கொண்டிருந்த அதே வேளையில்தான், தேவதாசி நடனங்களை ரசித்துக்கொண்டு கோயில்களில் ஆறுகாலப் பூஜைகளும் நடந்துகொண்டிருந்தன என்பதும் கவனம் கொள்ளவேண்டிய ஒன்று. ஆனால் அயோத்திதாசர் இந்து மதத்திலிருந்து பௌத்தத்துக்கு மாறுவதற்கான பகுதி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. 

வாசகர்களிடம் நீதியுணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த நாவல் எழுதப்பட்டதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆனால் எனக்கென்னவோ இந்த நாவல் வாசகர்களிடம் பரிவுணர்ச்சியைத்தான் ஏற்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. பரிவுணர்ச்சிக்கும் நீதியுணர்ச்சிக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. பரிவுணர்ச்சி என்பது தன்னைப் பற்றிய உயர்வான மனநிலையிலிருந்து மேலிருந்து கீழ் பார்க்கும் உணர்ச்சி. ஆனால் நீதியுணர்ச்சியோ குற்றவுணர்ச்சியோடு தன்னிலை குறித்த விசாரணையை மேற்கொள்வதால் எழும் உணர்ச்சி. பஞ்சத்தால் பாவம் இத்தனை மக்கள் செத்தார்களே என்கிற பரிவுணர்ச்சியைத்தான் ‘வெள்ளை யானை’ குறித்து வரும் பெரும்பாலான விமர்சனங்களில் காணமுடிகிறது. மாறாக அதற்குத் தங்கள் சாதி இருப்பும் ஒரு காரணம் என்கிற குற்றவுணர்ச்சியை அவற்றில் காணமுடிவதில்லை. இருந்தபோதிலும் குறைந்தபட்சம் அத்தகைய பரிவுணர்ச்சியும்கூட ஏதோ ஒருவகையில் வரலாற்றுத்தேவையாக இருக்கிறது என்கிற அடிப்படையில் ‘வெள்ளை யானை’யைச் சாதகமாக மதிப்பிடலாம்.

http://sugunadiwakar.blogspot.in/

வெள்ளையானை- அதிஷா

அது 2009ம் ஆண்டின் துவக்கம். இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயம். கொத்து கொத்தாக மக்கள் இறந்துபோவது குறித்த செய்திகளும் படங்களும் இணையமெங்கும் வியாபித்திருந்தது. ரத்தந்தோய்ந்த அப்படங்களை பார்க்கும்போது மனது கிடந்து பதறும். நிர்வாணமாக கொல்லப்படும் பெண்களின் இளைஞர்களின் வீடியோக்களை பார்க்கும்போது கண்களில் நீர் கசியும். குழந்தைகள் பெண்கள் வயோதிகர்கள் என தினம் தினம் செத்துப்போன மக்களின் எண்ணிக்கையை கிரிக்கெட் ஸ்கோர் போல ஊடகங்கள் அறிவித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை.

அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் உள்ளம் தவிக்கும். ஒவ்வொரு முறையும் பதட்டமாகி பின் உடல் வெலவெலத்து என்ன செய்தவதென்று யோசித்து எதை எதையோ செய்து இறுதியில் எதுவுமே செய்யாமல் அமைதியாகும்.

நம்மால் என்ன செய்துவிட முடியும் என்கிற மோசமான கையறுநிலையின் உச்சத்தை அந்நாட்களில் நம்மில் பலரும் எட்டியிருக்கலாம். மிஞ்சிமிஞ்சிப்போனால் கலைஞரையும் ராஜபக்சேவையும் திட்டி நாலைந்து கட்டுரைகள் ஸ்டேடஸ்கள் ட்விட்டுகள் எழுதி இணையத்தில் போட்டு மனதை தேற்றிக்கொள்ளலாம். இன்றுவரைக்குமே நாம் அதையேதான் தொடர்கிறோம். அந்த மார்ச்,ஏப்ரல் மாதங்களில் சென்னையில் நடந்த அநேக போராட்டங்களில், ஊர்வலங்களில் கலந்துகொண்ட சமவயது இளைஞர்கள் மத்தியில் இதே உணர்வை உணர்ந்திருக்கிறேன். அந்த ஊர்வலங்களில் கருணாநிதி ஒழிக என வெறித்தனமாக கோஷம்போட்ட திமுக அனுதாபிகளைக்கூட பார்த்திருக்கிறேன். இந்த மனநிலையின் உச்சம் தொட்ட சிலர் தன்னையே மாய்த்துக்கொண்டதையும் கடந்திருக்கிறோம். 

இந்த கையறு நிலையை எதிர்கொள்ளும் ஒருவனுடைய மனவோட்டங்களும் அந்த இக்கட்டான காலகட்டத்தினை கடக்கிற தருணங்களும், அந்தரங்கமான உரையாடல்களுமாக நீள்கிறது ஜெயமோகனின் ‘’வெள்ளையானை’’ நாவல். இதனாலேயே இப்படிப்பட்ட கையறுநிலையை அடிக்கடி கடக்கிற நமக்கு இந்நாவல் மிக நெருக்கமான ஒன்றாகிவிடுகிறது.

வெள்ளையர்களின் ஆட்சிகாலத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெரிய பெரிய பாளங்களாக கொண்டுவரப்படும் ஐஸ்கட்டிகளே வெள்ளையானையாக இந்நாவலில் உருவகப்படுத்தபடுகிறது. அல்லது மிகசிறுபான்மை ஆங்கிலேயர்களால் அடக்கி ஆளப்பட்ட இந்தியா எனும் மாபெரும் தேசம் மிகச்சிறிய ஆங்கிலேயர்கள் அடக்கி ஆண்டதையும் கூட யானையும் பாகனுமாக உருவகிக்கலாம். (வெள்ளையர்களின் யானை!) நாவலில் வருகிற ஏய்டனுக்கும் கூட இதே சந்தேகம் வருகிறது.. இவ்வளவு பெரிய யானை ஏன் இந்த சின்ன பாகனுக்கு அடிமையாய் இருக்கிறது?

1878ஆம் ஆண்டு சென்னை ஐஸ்ஹவுஸில் நடந்த ஒரு வேலைநிறுத்தம்தான் நாவலின் களம். 300 தலித் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்த எதிர்ப்பொலி. தங்களோடு பணியாற்றிய ஒரு தொழிலாளியும் அவனுடைய மனைவியும் அமெரிக்க நிறுவனம் அமர்த்திய இந்திய ஆதிக்கசாதி கங்காணிகளால் கொல்லப்பட அதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்கின்றனர் அப்பாவி தலித்துகள்.

அதுதான் இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தம் என்று குறிப்பிடுகிறார் நாவலின் ஆசிரியர். அந்த சம்பவம் குறித்து திருவிக தன் வாழ்க்கை வரலாற்றி எழுதியிருந்த இரண்டொரு வரிகள்தான் இவ்வளவு பெரிய நாவலை எழுதுவதற்கான துவக்கப்புள்ளியாகவும் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

சென்னையில் இன்று விவேகானந்தர் இல்லமாக இயங்கிவருகிற இந்த இடம் முன்பு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ்கட்டிகளை சேமிக்கிற மற்றும் பின் நாடெங்கும் விநியோகிக்கிற கிடங்காக இருந்தது. மிக மோசமான சூழலில் உடல் நலக்குறைவோடு குறைந்த கூலிக்கு இங்கே பணியாற்றிய இரண்டு தலித் தொழிளார்கள் கங்காணிகளால் கொல்லப்பட அதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் அயர்லாந்து நாட்டிலிருந்து இந்தியா வந்து ஆங்கிலேய காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் ஏய்டன். அவருடைய பார்வையிலேயே அக்காலகட்டமும் சூழலும் மக்களின் வாழ்க்கையும் அவருடைய மனவோட்டங்களுமாக நாவல் விரிவடைகிறது.

ஐஸ்ஹவுஸில் வேலை பார்க்கிற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தட்டிக்கேட்க முனைகிறார் ஏய்டன். அவருக்கு ஓரளவு படிப்பறிவும் பட்டறிவும் கொண்ட தலித் இளைஞனான காத்தவராயன் உதவுகிறான். ஆதிக்க சாதியினரால் எப்படியெல்லாம் தலித்துகள் அடக்கப்படுகின்றனர் என்பதை அறிகிறான்.

அந்த காலத்தில் சதுப்பு நிலமாக கிடந்த புதுப்பேட்டை பகுதியில் முகாமிட்டிருந்த ஏழை தலித் மக்கள் வாழ்ந்த குடியிறுப்புக்கு அழைத்துச்சென்று காட்டுகிறான் காத்தவராயன். அதே பகுதியில் ஏழைகளை புறக்கணித்துவிட்டு ஒரளவு வசதியாக வாழ்ந்த தலித்துகளை பற்றிய செய்தியும் இங்கே இடம்பெறுகிறது.
செங்கல்பட்டு பகுதியில் எங்கெங்கோ இருந்து பிழைப்பு தேடி சென்னையை நோக்கி வந்து பசியால் வாடி உடல்மெலிந்து சாகும் ஆயிரக்கணக்கான மக்களை பற்றியும் ஏய்டன் காத்தவராயன் மூலமாக தெரிந்துகொள்கிறான். அதை குறித்தெல்லாம் விளக்கமாக ஒரு அறிக்கையை தயார் செய்து அந்த காலக்கட்டத்தில் கவர்னராக இருந்த ட்யூக் ஆஃப் பக்கிங்ஹாமுக்கு அளிக்கிறான்.

அம்மக்களுக்கான நீதியை பெற்றுகொடுக்க முனையும் அவனுடைய போராட்டம் படுதோல்வியை சந்திக்கிறது. அதிகாரத்தின் முன் மண்டியிட்டு பெருந்தோல்வியை சந்திக்கிறான். மனமுடைந்து விபச்சார தொழிலில் ஈடுபடும் தன் காதலியான மரிஸாவிடம் சரணடைகிறான். நாவலில் மிகவும் உணர்ச்சிகரமான இடம் இதுவென்று தோன்றியது. அதிகாரத்தின் உச்சியில் இருக்கிற ஏய்டன், விபச்சாரத்தொழிலில் ஈடுபடுகிற மரிஸாவின் முன் மண்டியிட்டு பாவமன்னிப்பை கோருகிறான்.. அவள் மறுக்க அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்ள தற்கொலைக்கு முயல்கிறான். ஆனால் பிழைத்துவிடுகிறான். அதற்கு பிறகு அவனும் அந்த அதிகாரத்தின் ஆற்றில் தன்னை கரைப்பதோடு நாவல் முடிகிறது.

இந்நாவலில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு ஒரு கவளம் சோற்றுக்காக ZOMBIE களைப்போல அலைகிற ஏழை மக்களை ஜெயமோகனின் எழுத்து கண்முன்னே காட்சிப்படுத்துகிறது. ஒரு அத்தியாயம் முழுக்க ஏய்டனோடு நாமும் கூட செங்கல்பட்டில் ப்ரிட்டிஷ் காவலர்களால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிற ஆயிரக்கணக்கான ஏழைகளோடு செய்வதறியாது திரிகிறோம். அவர்களுக்கு ஒரு பருக்கை உணவை கூட கொடுக்க இயலாமல் தவித்தபடி பயணிக்கிறோம். படிக்கும்போதே பதற ஆரம்பித்துவிடுகிறது. அச்சு அசலாக அக்காட்சிகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார். ஏய்டனின் காலணிகளில் ஓட்டிக்கொண்டு அழிய மறுக்கிற அந்த ரத்தத்துளிகள் நம்முடைய உடலிலும் ஒட்டிக்கொள்கின்றன.

தாதுபஞ்சத்தால் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஏழ்மையை எப்படி தங்களுக்கு சாதகமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், அவர்களுக்கு ஒத்து ஊதிய ஆதிக்க சாதி வணிகர்களும் முதலாளிகளும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதும் நாவலில் விளக்கப்படுகிறது. குறிப்பாக கோமுட்டி செட்டிகள், நாயக்கர்கள், நாயுடு,ரெட்டி என இப்பட்டியல் நீள்கிறது. இந்த ஆதிக்க சாதியினரின் திட்டங்களை எப்படி இடைநிலை சாதியினர் செயல்படுத்திக்காட்டினர், அவர்களுடைய ஆதிக்கசாதி மானோபாவம் எந்த அளவுக்கு வேரூன்றி இருந்தது என்பதையும் சில காட்சிகளில் விளக்குகிறார். 

அடிப்பட்டு கீழே கிடக்கிற தலித்தை தூக்க சொல்கிறான் ஏய்டன். ஆனால் இரும்பினைப்போல நிற்கிற காளமேகத்தின் சிப்பிபோன்ற கண்கள் அக்காலகட்டத்தில் நிலவிய கடுமையான சாதிவெறிக்கு சாட்சியாக நாவல்முழுக்க பரவியிருக்கின்றன. நாவலில் நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத பாத்திரம் காத்தவராயனுடையது. அயோத்திதாச பண்டிதரின் சாயலில் உருவாக்கப்பட்ட அந்த பாத்திரம் பேசுகிற விஷயங்களும் சிந்திக்கிற நேர்த்தியும் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவராக இருப்பாரோ என்று எண்ண வைப்பவை. ஆனால் அவரோ நீலகிரி பக்கம் குருகுலக்கல்வி பயின்றவராகவே ஜெயமோகன் உருவாக்கியிருக்கிறார். ஆனால் அவருடைய பாத்திரம் ஆதிக்க சாதிக்கெதிராக தலித் மக்களிடையே முதன்முதலாக எழுகிற ஒற்றை குரலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நாவல் அயர்லாந்து நாட்டுக்காரனான ஏய்டனின் பார்வையிலும் மனவோட்டத்திலும் செல்வதால் ஏதோ மொழிபெயர்ப்பு நாவலை படிக்கிற உணர்வு உண்டாவதை தவிர்க்க முடியவில்லை. அதே சமயம் துல்லியமாக ஒரு வெளிநாட்டுக்காரனைப்போல சிந்திக்கவும் அவனுடைய மனவோட்டங்களை சித்தரிக்கவும் மிகப்பெரிய CRAFTMANSHIPம் திறமையும் வேண்டும். அது நீண்டகாலமாக தொடர்ந்து எழுதுவதன் மூலம் கண்டைகிற நேர்த்தி. அது ஒரு மிகச்சிலஇடங்கள் தவிர்த்து எல்லாமே கச்சிதமாக வெளிப்பட்டிருக்கிறது. (காத்தவராயன் என்கிற பெயர் சைவசமயத்துடையதாச்சே என ஓரிடத்தில் கேட்கிறான் ஏய்டன்!) மற்றபடி மனநுட்பமும் மொழிநுட்பமும் மிகச்சரியாக இந்நாவல் முழுக்க வெளிப்படுகிறது. 

நாவல் முழுக்க நிறைந்திருக்கிற அந்த கையறுநிலை வாசித்து முடிக்கும்போது நம்மையும் தொற்றிக்கொள்கிறது. நம் கண்முன்னே அரங்கேறுகிற மிகப்பெரிய பாதகச்செயல்களையும் எளிதாக எடுத்துக்கொள்கிற மனநிலைக்கு நாம் எப்படி வந்தடைந்தோம் , நம்மிடமிருநுத நீதியுணர்ச்சியை எங்கே தொலைத்தோம் என்கிற கேள்வியையும் எழுப்பவும் அது தவறுவதில்லை
http://www.athishaonline.com/2013/12/blog-post.html

வரலாற்றின் தன்னிலைகள் -ராஜ் கௌதமன்

சுமைகளிலெல்லாம் பெருஞ்சுமை அன்னியனைச் சுமப்பது’’ (மெகாலே பிரபு) என்ற வாக்கியம் இங்கே எல்லாச் சாதிகளாலும் அன்னிய சாதிகளாக்கப்பட்ட தலித்துகளுக்கே உரிய வாசகமாகும். தமிழக நெடிய வரலாற்றில் தெலுங்கரின் ஆட்சிக்குப் பின் வந்த ஆங்கிலேயே வணிகமுதலாளிய காலனியாட்சியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்துச் சாதிய அமைப்பாலும் பிரிட்டனின் வணிக முதலாளியத்தின் ஏகாதிபத்தியக் கொள்ளையாலும் தலித் மக்கள் சுமந்த பெருஞ்சுமையையும் வெற்றுச்சடலங்களாக மடிந்து மக்கிப்போன பேரவலத்தையும் ஜெயமோகனுடைய வெள்ளையானை (எழுத்து 2013) என்னும் வரலாற்று நாவல் காலம், இடம், கருத்தியல் மற்றும் அரசியல் பிரக்ஞையோடு படைத்துக் காட்டுகின்றது. இந்தப் படைப்பு தனியாக இன்றிப் படைப்புக்குள்ளே வாசகன் இருக்கிறான் என்றுதான் கூற வேண்டும். தமிழ்ப் பிராமண எழுத்தாளரான மாஸ்தியின் வரலாற்று நாவலுக்காகச் 'சிக்கவீர ராஜேந்திரன்' கன்னட மக்களால் 'மாஸ்தி எங்கள் ஆஸ்தி' என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டு வருகிறார். இன்றைய தமிழ்ச்சூழலில் இப்பேர்ப்பட்ட ஒரு வரலாற்று நாவல் வெளிவந்ததுகூடத் தெரியாத மவுனம்தான் நிலவும்.

'வெள்ளையானை' என்பது அமெரிக்காவிலிருந்து மதராஸ்பட்டினக் கடற்கரையில் இருந்த 'ஃபிரடெரிக் டியூடர் அண்ட் கம்பெனிக்கு (ஐஸ் ஹவுஸ்) இறக்குமதி செய்யப்பட்ட முப்பது டன் எடையுள்ள (ஏறத்தாழ பத்து யானைகளின் மொத்த எடை) ஐஸ் பாளத்தைச் சுட்டுகிறது. இதனைக் கையாண்டு ரம்பத்தால் அறுத்துச் சிறுசிறு துண்டுகளாக்கும் ஆபத்தான வேலையை உணவுக்காக அடிமைகளாக அமர்த்தப்பட்ட, பஞ்சம் பிழைக்க வந்த தலித் மக்கள் (300 பேர்கள்) செய்து செத்துமடிந்தார்கள். அந்த மக்கள் தலித் காத்தவராயன் (அயோத்திதாசரின் வாலிபப் பருவம்) போதனையாலும் ஏய்டன் என்கிற கற்பனாவாத மனிதநேயமிக்கக் காப்டனின் ஆதரவாலும் வேலை நிறுத்தம் செய்து தங்களுடைய முதல் உரிமைக்குரலை முழங்கிய அந்த நாலைந்து நாள் நிகழ்வுகளை ஆசிரியர் ஆத்மார்த்தமாகவும் தரும ஆவேசத்தோடும் புரட்சிகர மாந்தவிய நோக்கத்தோடும் படைத்துள்ளார். 1878 காலக்கட்டம் பற்றிக் கிடைக்கக்கூடிய தகவல்களான உயிர்ச்சுவடுகளைச் (Fossils) சேகரித்து அவற்றுக்கு உயிரூட்டுகின்றவாறு மீட்டுருவாக்கம் செய்து, அவர் கூறுவதுபோல அந்தக் காலகட்டத்தின் மாந்த மனநிலைகளையும் அன்றைய அரசியலையும் புனைவால் தொட்டு வெற்றி கண்டுள்ளார்.

இந்த 'வரலாறு' என்பது முற்றிலும் புறவயமானதாகவோ தெளிவாகப் பார்க்கக்கூடியதாகவோ அன்றி எளிதில் அறியத்தக்கதாகவோ இருப்பதில்லை. காலத்தின் வெகுதொலைவிலுள்ள வரலாறு நிகழ்காலத்தின் வசதிகளோடு முழுவதும் அறிந்திடத்தக்கதாகத் தோன்றும். ஆனால் அது பல்வேறு சாத்தியப்பாடுகளில் ஒன்றுதானே யொழிய நிச்சயமான ஒன்றன்று. நிகழ்கால வரலாறு, அந்த வரலாற்றின் தன்னிலைகளை வரலாற்றுக்குள்ளே இயங்குவதால் அதனை முற்றிலும் புறவயமாக அறுதியிட்டு விளக்கிட முடியாததாக இருக்கிறது. இந்த அடிப்படையான வரையறையைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

மேலும் எந்த வரலாற்று நிகழ்விற்கும் தனியான ஒரு காரணம் இருக்க இயலாது. அது, பொருளாதார சமூக அரசியல் எதார்த்தங்களைக் கொண்ட பரந்துபட்ட ஒரு வலைப்பின்னலோடு பிரிக்கவொண்ணாதவாறு பிணைந்துள்ளது. 'வெள்ளையானை' படைத்துள்ள வரலாறு பன்முகப்பட்டது; பல வரலாறுகள் பிணைந்ததொரு வரலாறு. உலகையே கொள்ளையடித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வரலாறு, அடிமைத்தனத்தை எதிர்த்த அயர்லாந்து மக்கள் வரலாறு, பிரெஞ்சுப் புரட்சியின் (1789) சுதந்திர சமத்துவ வரலாறு, ஷெல்லியின் அ-ராசக உணர்ச்சிக் கொழுந்துகள் எரிகின்ற அற்புதநவிற்சிக் (Romantic) கவிதை வரலாறு, மறுமலர்ச்சிக் கிறிஸ்தவ போதக வரலாறு, புதிய வணிக முதலாளிய பொருளாதார-அரசியல் அதிகாரத்தை, கிழக்கு இந்தியக் கம்பெனியாருக்கு 'துபாஷி'களாயிருந்த பிராமணர்கள் கைப்பற்றி சாதியத் தலைமையைத் தொடர்ந்த வரலாறு, பிராமணியத் தலைமையில் முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகள் ஓரணியாகத் திரண்டு தலித் மக்களை அடிமைகளாக்கிய வரலாறு ஒவ்வொரு சாதியும் தன்னைத் தலித் சாதியிலிருந்து தூரப்படுத்தியும் தத்தம் கிளைகளுக்குள் ஒன்றையொன்று தூரப்படுத்தியும் சாதிய உயர் வரிசையைப் பிடிக்கப் போராடிய வரலாறு, ஆங்கிலேய மருத்துவம், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், கல்விசார்ந்த வரலாறு, ஜார்ஜ் கோட்டைக்குள் வாழ்ந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள், அதிகாரிகள், படைத்தலைவர்கள், டாக்டர்கள், நீதிபதிகள் அவர்களுடைய குடும்பங்கள் ஆகியவர்களுடைய நடையுடை பாவனைகள், நவீன வசதிகள், நாகரிக வாழ்க்கை, கலாச்சாரச் சீரழிவு, ஆன்மா இழந்த போலிக் கலாச்சாரம், இரட்டைவேடம், கயமை நிறைந்த உலகப்பார்வை ஆகியவற்றின் வரலாறு ஆகிய அத்தனை வரலாறுகளும் 'வெள்ளையானை' என்கிற வரலாற்று நாவலுக்குள் உயிர்ப்புடன் செயல்படுகின்றன.

கறுப்பர் நகரம் (பெரும்பறச்சேரி) என்றழைக்கப்பட்ட பகுதியில் விலங்குகள்கூட வாழாத குடியிருப்பில் வாழ்ந்த தலித்துகளின் கோரமான வறுமை நிலைமை பற்றியும் மதராஸிலிருந்து செங்கல்பட்டு போகிற சாலையின் இருமருங்கும் பஞ்சத்தால் கொலைப்பட்டினிப் பட்டாளங்களாக அலைமோதும் தலித்துகள் பற்றியும் செத்துவிட்ட, செத்துக் கொண்டிருக்கிற, தலித் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உடல்களை நாய்கள் குதறி இழுத்துத் தின்னுவது பற்றியும் நாவலில் புனைந்துரைக்கப்படும் பகுதிகள் தமிழ் நாவலுக்குப் புதியவை; தமிழ் நாவல்கள் அறியாதவை. இதற்கு அபாரமான கற்பனை ஆற்றல் மட்டும் போதாது. மொழியைச் செயற்கையாகக் கையாளுகை (manipulation) செய்தால் மட்டும் போதாது. நீதி உணர்ச்சியும் மனக்கிளர்ச்சியும் (spiritual), தார்மீகப் பொறுப்பும் (moral responsibility) வேண்டும்.

மேலும் வரலாற்றுத் தடயங்களைக் கொண்டு, அந்த வரலாற்றுக் காலத்து நாகரிக, கலாச்சாரச் சூழல்களையும் அவற்றோடு கொண்ட இயங்கியல் உறவால் கற்பித்துக் கொண்ட விழுமியங்களால் உருவமைத்த மாந்தரின் பார்வைகளையும் மனப்பாங்குகளையும் நியாயங்களையும் நடையுடை பாவனைகளையும் வாழ்விருத்தலுக்கான ஓர்மையான, ஓர்மையற்ற நோக்குகளையும் நம்பிக்கை-மூடநம்பிக்கைகளையும் அசட்டுத்தனங்களையும் கற்பனைகளையும் உடல்-உள்ளத் தூண்டுதல்களின் தேவைகளையும் தேவை நிறைவேற்றங்களையும் நிறைவேற்ற முறைகளையும் கண்மூடித்தனமான குருதி உறவு சார்ந்த வைராக்கியங்களையும் அவ்வக்காலத்து மாந்தவிய (humanistic) வகைகளையும்-நாவலின் மாந்தர்தம் மனம் மொழி செயல் தளங்களில் புலப்படுத்துவதன் வழியாக அந்தக்காலத்து அரசியலையும் அந்தந்தப் பாத்திரங்களின் தேர்வுகளையும் மனநிலைகளையும் புனைவுமயமாக்குவதன் வழியாக (பக்.20) அக்கால மாந்தரின் எதார்த்தமான உலகினை நிர்மாணம் செய்ய வேண்டிய பொறுப்பு வரலாற்று நாவலாசிரியனுக்கு உள்ளது. 'வெள்ளையானை' நாவலில் இந்தப் பொறுப்புணர்வு திடமாக இருப்பதால் இது தகவல்கள், தரவுகள் ஆகியவற்றின் தொகுப்பாகவோ அரசியல் பிரச்சாரமாகவோ தலித் மக்களின் போராட்ட அரசியல் வெற்றி பெறுவதற்கான ஓர் இலட்சிய ஆவேசத்தின் ஆசை நிறைவேற்றமாகவோ நழுவிச் சரிகிற பலவீனம் இல்லாமல் உள்ளது. இது ஒரு சாதனை. இதனால்தான் வாசகன் இந்நாவலை அந்தரங்கமாக வாசிக்கும்போது ஆசிரியன் கூடவே இருக்கிறான் என்ற பிரக்ஞையின்றி வாசிக்க முடிகிறது. (ஆயினும் ஓரிரு இடங்களில் ஒரு பொருளுக்கு மூன்றுமுதல் நான்கு உவமைகளை ஆசிரியன் அடுக்குகிறபோது இச்சாதனையில் ஒருசிறு நெருடல் ஏற்படுகிறது பக். 45, 190).

'வெள்ளையானை' நாவலில் ஜெயமோகன் படைத்த கற்பனையான, நிஜமான பாத்திரங்கள் இதுவரை வெளிவந்துள்ள தமிழ் வரலாற்று நாவல் பாத்திரங்களிலிருந்து வேறுபடுகின்றன. ஐஸ்ஹவுஸ் தொழிலாளர் போராட்டத்திற்குப் பின்புலமாகச் செயல்பட்ட காத்தவராயன் என்ற இளைஞன் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'காலணாதமிழன்' பத்திரிகை வழியே உரிமைக்குப் போராடிய பௌத்த மகான் அயோத்திதாசரின் 1878 ஆண்டுப் பதிப்பாக வருகிறான். இந்தக் காத்தவராயனின் தார்மீகக் கோபத்தின் வேகத்தை வெறும் சாதிவெறுப்பாகப் பார்த்திட இயலாது, தொடர்ந்து உரையாடுவதற்கு எப்போதும் திறந்த உள்ளத்தோடு தயாராக இருந்த இவரது பாத்திரப்படைப்பு கம்பீரமானது, இவருக்கு நேரெதிரான வாழ்நிலையிலிருந்து முரஹரி அய்யங்கார் பாத்திரம் (1892 ஏப்ரலில் கூடிய சென்னை மஹாஜன சபையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு நீலகிரிஜில்லா பிரதிநிதியாக அயோத்திதாசர் வந்து பறையரின் ஆலயப்பிரவேசம் பற்றிப் பேசத் தொடங்கியதும் அதனை நிராகரித்த சிவராமசாஸ்திரியின் முன்னோடி) அன்றைய எதார்த்தத்தைப் பதிவுசெய்யும் பாத்திரம். தலித்துகளைக் கடவுள் அவர்களது முன்ஜென்ம பாவங்களுக்காகத் தொடர்ந்து கொல்வார், அழிப்பார் என்று நம்புகிற பாத்திரம். பிராமணனாகிய தனக்கு முன் ஒரு தலித் வெள்ளை உடையும் தலைப்பாகையும் அணிந்து நின்ற ஒரு பெரும் பாவச் செயலுக்காகத் தலித் சாதிக்காரர்களில் லட்சம்பேரைக் கடவுள் அழிப்பார் (340) என்று நம்புகிறார். குதிரைவீரர்கள், அமைதியாக அமர்ந்து போராடிய தலித் மக்களைக் கதம் செய்த காட்சியைக் கூட்டுமனிதப் புணர்ச்சியாகக் கண்டுகளிக்கிறார். தலித்துகளை இப்படித்தான் அவரது வம்சாவழியினர் நோக்கி வந்திருக்கிறார்கள்.

நாவலுக்கெனப் புனைந்து கொண்ட நாவல் மாந்தரின் குணவிசேசத்தோடு நாவலின் பிரச்சினை உயிரோட்டமாகப் (organic) பிணைந்துள்ளதால் நாவலின் இலக்கியத்தகுதி பிரம்மாண்டமான பரிமாணத்தை எட்டுகின்றது. குறிப்பாக, ஐரிஷ் குடிமகனான காப்டன். ஏய்டன் பைர்ன் பாத்திரத்தின் உருவாக்கத்திற்கு ஏற்றவாறு, அவன் தலித் மக்கள்மீது ஆழ்ந்த அனுதாபம் கொண்டவனாகப் படைத்திருப்பது ஆசிரியருக்கு ஒரு பெரிய வெளியை நாவலில் திறந்து விட்டிருக்கிறது. ஏய்டனின் மிக எளிய குடும்பச்சூழல், ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட நிலை, ஷெல்லியின் அ-ராசக உயர்ச்சிக் கவிதையில் கொண்ட வெறித்தனமான ஈர்ப்பு, கற்பனாவாதத்தில் திளைக்கிற இளமை ஆகிய பின்புலங்கள் மதராஸபட்டினத்தில் மிருகத்தினும் கீழான வாழ்க்கை முறைக்குத் தள்ளப்பட்டு மற்றெல்லாராலும் புறக்கணிக்கப்பட்ட தலித் மக்கள் மீது உணர்ச்சிகரமாக அனுதாபம் கொள்ளுவதற்கு ஏற்ற தருக்க நியாயங்களாக அமைகின்றன. ஏய்டனின் பாத்திரப்படைப்பு ஜெயமோகனுடைய கவித்துவ ஓட்டத்திற்கு மிகவும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. இயற்கைக் கோலங்கள், ஏய்டனுடைய அதிர்ச்சி, தோல்வி, கையாலாகாமை பற்றிய மனசஞ்சலங்கள் ஆகியவை பற்றிய வருணனைகளில் கவித்துவம் மீறிடுகிறது (பக்.219).

ஜெயமோகன் படைத்த 1878 காலகட்டத்தைச் சேர்ந்த அமெரிக்க, ஐரோப்பிய, பிரிட்டிஷ் பாத்திரம் ஒவ்வொன்றும் அசலானவை, தனித்துவமானவை. அமெரிக்க நிக் பார்மர் ஒரு கிழட்டுநரி, மக்கன்ஸி ஒரு பிழைப்புவாதி, காப்டன். ஆரோன் நடைமுறைவாதி, பாதர் பிரண்ணன் நிதானமான விமர்சகர், கவர்னர். டியூக் ஆஃப் பக்கிங்ஹாம் கொள்ளையடிக்கத் தெரியாத ஒரு கொள்ளைக்காரர், ரஸ்ஸல் பழுத்த காரியவாதி, ஆதம் ஆண்ட்ரூ ஒரு சம்மனசு (angel), உண்மைக் கிறிஸ்தவன். இந்த நாவல் மாந்தர் தத்தம் வாழ்நிலையோடு தாம் கொண்ட இருவழி ஊடுறவின் அனுபவத் தளங்களிலிருந்து பரிமாறுகிற விசயங்கள், அவர் தம் குருதியோடு கலந்தவை, மானிட வாடை நிரம்பியவை. அவர்கள் அக்காலத்துக் காலனிய, ஏகாதிபத்திய, நச்சுத்தனமான சாதிய, சூழல்களிலிருந்து இவற்றைத்தான் யோசித்திருக்க முடியும், பேசியிருக்க முடியும். இந்தச் சாத்தியப்பாட்டினை வாசகன் ஓர்மையில்லாமலே உள்வாங்க முடிந்துள்ளது. இது, ஆசிரியன் பிரசன்னமாகியபடியே மறைந்து போகும் புனைவுவித்தைதான்.

நாவலில் சிறிதளவு இடம்பெறும் அந்த மரிஸா என்ற ஆங்கில இந்திய மாது நாவலுக்குப் புதிதல்ல என்றாலும் அவளது தன்மான உணர்ச்சியும் எதிர்காலம் பற்றிய ஆழ்ந்த நம்பிக்கையும் ஏய்டனை அவளது காலடியில் வீழ்த்த வல்லவை.

இவ்வாறு திறமையாக ஒதுங்கியிருந்து பாத்திரங்களைப் பேசவைக்கும் ஆசிரியர், குறிப்பாகப் பாதிரியாரின் குதிரை வண்டி ஓட்டி ஜோசப் (இவன் கிறிஸ்தவ மதம் மாறிய தலித்) என்ற பாத்திரம் மூலமாகப் 'பெண்ணியம்' பேசுகிறார் (192-193). பெண்களும் தலித்துகளைப் போலத் தீண்டப்படாதவர்கள், தலித்துகள் வெளியே நிறுத்தப்படுகிறார்கள். பெண்கள் (உயர்சாதி) உள்ளே அடைக்கப்படுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம் (193).‘‘எங்களுக்காவது வெயிலும் காற்றும் கிடைக்கிறது. அவர்களுக்கு அதுவுமில்லை. அவர்கள் வெளியே போக அனுமதியே இல்லை. இருட்டறையில் பிறந்து அங்கேயே சாக வேண்டும். எல்லாரும் உண்டது போக எஞ்சியதை உண்ண வேண்டும். இரவும் பகலும் பசியுடன் சமைத்துக்கொண்டே இருக்க வேண்டும்’’ (193). இதனை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம், கருத்து சிறப்பானதாக இருந்தாலும் கூட! இது ஒரு காலப்பிழை.

காலனிய காலத்தில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுடைய தார்மீக வீழ்ச்சியையும் கலாச்சாரச் சீரழிவையும் இறுதி அதிகாரத்தில் தென்காசியில் நிகழும் இரவுவிருந்து வைபவத்தைக் கொண்டு ஆங்கிலேயரின் பேச்சுமுறையில் வரலாற்றுப் பிரக்ஞையோடு ஆசிரியர் வருணித்துச் செல்லுவது தமிழ்ப் புனைகதையில் ஓர் அபூர்வ நிகழ்வெனச் சொல்லலாம்.

நாவலை வாசித்து முடித்தபின் இனம்புரியாத ஒரு பாரம் வாசக மனதை அழுத்துவதை உணரலாம். இது வாசக மனசாட்சியைத் தட்டி எழுப்பவல்லது. பல விதத்திலும் சிறந்து விளங்கும் இந்த முதலாவது வரலாற்று நாவலில்-தலித் மக்கள், போராட்டம் பற்றிய முதல் வரலாற்று நாவலில் ஒற்றுப்பிழைகளும் எழுத்துப்பிழைகளும் அளவுக்கு அதிகமாக வந்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். அதோடு பக்கம் 276இன் இறுதியில் ‘‘என்றான் காத்தவராயன்’’ என்றிருக்க வேண்டிய இடத்தில் ‘‘என்றான் ஏய்டன்’’ என்றிருக்கிறது. அடுத்த பதிப்பில் இவற்றைத் திருத்தி வெளியிட வேண்டும். பிழைகளைத் திருத்தி உதவ நான் தயார்.
http://www.kalachuvadu.com/issue-169/page149.asp

யாவோ இல்லாத வேதாகமம்- நோயல் நடேசன்

தமிழ்நாட்டு நாவல்களின் கருப்பொருள்கள் எழுத்தாளனால் தன்னை சுற்றிய நிகழ்கால புறச்சூழலில் இருந்து எடுத்தாளப்படுகிறது. அது குறைபாடானது அல்ல. ஆனாலும் ஒரு எழுத்தாளன் தான் சார்ந்த சாதி, பின்பற்றும் கருத்தியற்கோட்பாடு, தனது பிரதேசம் எனத் தன்னைச் சுற்றி இலச்சுமணனின் கோடு போல் போட்டு விட்டு, சீதையைப்போல் அல்லாது, மீறாது நல்ல பிள்ளைகளாக உள்ளிருந்து இலக்கியம் படைக்கும் பொழுது அந்த இலக்கியத்தின் ஆயுட்காலம் குறைந்து விடுகிறது.
அதேபோல் நமது ஈழத்தவர்கள் இலக்கியமும் போருக்கு முன்பு, மார்க்சிய முற்போக்குவாதம் : பின்பு தமிழ்த்தேசியம் என புறநானூறு பேசி: இப்பொழுது போர் அழிவுகள் நடந்த பின் கண்ணீர்த் துளியின் உட்பரப்புக்குள் அல்லது நத்தை தனது கூட்டுக்குள் அடங்குவது போல் அடங்கிவிடுகிறது.
புறக்கோட்பாட்டு விடயங்களில் இலக்கியம் நின்று விடுகிறது. இதுவும் தவறு அல்ல. ஆனால் இந்த புறச்சூழல் மாற்றமடையக்கூடியது. காரில்போகும் போது நுகரும் சாக்கடைவாசம் போல நம்மைக் கடந்து செல்லக்கூடியது: வரலாற்று நெடுஞ்சாலையில் சாதாரணமான மைல் கற்கள்.
தமிழ்த்தேசியத்தை வைத்து இலக்கிய பேச தற்போது இலங்கையில் முடியாது. அதேபோல் மாக்சிய முற்போக்கு இலக்கியவாதிகள் யாராவது இக்காலத்தில் இருந்தால் டயனோசரை மியூசியத்தில் பாரப்பதற்குச் சமனானது.
அக உணர்வுகளையும் அகஉணர்வின் கட்டுடைப்புகளையும் அல்லது மனித மனத்தின் விளிம்புகளில் அல்லது பிறள்வுகளில் நின்று அடிப்படையாக பேசிய நாவல்கள் நிரந்தரமானவை. ஆனால் அவை நமது இலக்கிய வெளியில் அதிகம் பயிரிடப்படாதவை அல்லது ஆங்காங்கு இடைக்கிடை கண்ணுக்கு தென்படுபவை.
அதன் காரணம் என்ன?
நான் நினைக்கிறேன் – மேற்கு நாட்டில் கலாச்சார சிந்தனை வளர்ச்சியோடு கலைகளும் வளர்ந்தது. இலக்கியம், ஓவியம், கட்டடிடக்கலை என்று ஆரம்பகாலத்தில் இருந்து பல வடிவங்களில் பரிணாமமடைந்துள்ளது. மேற்குநாட்டில் இலக்கிய தத்துவம், அல்லது ஓவிய வரலாறு எனும்போது அங்கே ஒரு பரிணாமவளர்ச்சி ஏற்பட்டது.
இந்த நுண்ணியல் துறைகள் அவர்கள் கலாச்சாரம், சமூகபொருளாதாரத்தை ஒட்டி வளர்ந்தன.
எமது தமிழ் சமூகத்தில் விஞ்ஞானத்தின் மகசூலை ஏகே 47 அல்லது கணினி என அனுபவித்தாலும் – சமூகத்தின் சிந்தனையில் மாற்றம் மயிர்க்குட்டி இலைக்கு இலை செல்லும் வேகத்திலே நடக்கிறது.
நிலஉடமை சமூகத்தின் பொருளாதாரத்தை நிலைநாட்ட ஏற்பட்ட கூறுகள் கைவிலங்குகளாக எமது சிந்தனையோட்டத்திற்கு அணை போடுகிறது. இன்னமும் உள்ளக இனவிருத்தி எனும் (incest) தாய்மாமனை திருமணம் செய்வதும், சீதனத்திற்கான கொலை மற்றும் சாதியக் கட்டுப்பாட்டை மீறியதற்காக சொந்தப் பிள்ளைகளைக் காவு கொடுக்கும் சமூகத்தில் புதிய சிந்தனைகள் என்பது நரிக்குறவர்கள் கைகளில் கிடைத்த வானொலி போன்றது.
“பாட்டைக் கேட்டபடி காக்கை குருவி சுடுவது போல.”
ஜெயமோகனின் வெள்ளையானை இந்தியாவுக்கு சமீபத்தில் விடுமுறையில் சென்றவேளை முதல்நாளில் படிக்கத் தொடங்கியது. பின்பு கொழும்பில் விமானச்சக்கரம் வெளியே வந்து தடால் என்ற அதிர்வுடன் தரையிறங்கும்போது கடைசி பக்கத்தை படித்து முடித்தேன்.
தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் செறிந்து வாழும் தமிழ்ப்பேசும் தமிழ்ப்பேசாத, தமிழர்கள் வரலாறு எப்படி தொடங்குகிறது என்பதை விளக்கும் ஒரு வரலாற்றுப் புனைவு.என்னை மலையில் இருந்து வரும் புதுப்புனலாக நெஞ்சில் தாக்கியது.
தமிழகத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால் வெளியேறிய தலித் மக்களே இன்று இலங்கையின் மலையகம், மலேசியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகளில் வாழும் பெரும்பான்மைத் தமிழர்கள். இவர்களது வரலாற்றின் தொடக்கப்புள்ளிதான் வெள்ளையானை. ஒருவிதத்தில் பபிலோனியாவிற்கு கடத்தப்பட்டு சென்ற யூதமக்களே தங்கள் வரலாற்றை பழைய ஏற்பாடாக எழுதியதாக தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் சொல்வதுபோல், இந்தத் தமிழர்களின் வெளியேற்றத்தின் சரித்திரம் இதில் உண்டு.
இந்த நாவலில் சிறப்புகளில் முக்கியமானது கதையில் அன்னிய தேசத்தவனான ஏய்டன் என்ற இராணுவ காப்டனை கதாநாயகனாக வைத்து அவனது மன உணர்வில் கதையை சொல்லுவுது. இது மிகவும் கடினமான விடயம். இருபத்தைந்து வருடங்களாக அவுஸ்திரேலியாவில் மேற்கு நாட்டு அனுபவத்தில் வாழ்ந்து வரும் நான், ஏதாவது இடத்தில் மிகைப்படுத்தியோ குறைவாகவோ சொல்லப்பட்டிருக்கிறதா என அவதானமாக பார்த்தேன்.
காணமுடியவில்லை.
பிரித்தானிய சாம்ராச்சியத்தின் ஒரு அங்கத்தவராக இருந்து கொண்டு ஷெல்லியின் கவிதை வரிகளில் சிக்கிக்கொண்டு கனவுலகத்தில் தனக்கான அறஉணர்வை உருவாக்க விரும்பும் ஒர் இராணுவ வீரனை மிகத் தெளிவாக சித்திரித்திருக்கிறார். நிகழ்காலத்தில் அதே அற உணர்வுடன் சஞ்சரிக்கும் பல மேல்நாட்டு இளைஞர்கள், யுவதிகள் பல சமூகநல நிறுவனங்களில் கடமையாற்றுகிறவர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
செங்கல்பட்டு மாவட்ட பஞ்சத்தின் பாதிப்பு சித்திரிக்கப்படுவது என்னை மனம் கலங்கி பல இடத்தில் புத்தகத்தை நிறுத்த வைத்தது. பஞ்சத்தில் மக்கள் தெருத்தெருவாக மரணமாகும் காட்சி, என் கண்களை கலங்க வைத்தது. வாசிப்பை நிறுத்தி கண்களைத் துடைத்து விட்டு சில நிமிடங்களின் பின்னேதான் தொடரமுடிந்தது.
கிரேக்க அறிஞரான அரிஸ்ரோட்டில் ஒரு கதைசொல்லியோ அல்லது மேடைப்பேச்சாளனே பின்வருவனவற்றில் உள்ள மூன்றில் ஒன்றைக் கையாளவேண்டும் என்றார்.
Ethos (சொல்பவனது தரம்: அதாவது ஒரு தத்துவஞானியின் கருத்து)
Pathos, (கேட்பவர்களின் உணர்வைத் துண்டுதல் : அரசியல்வாதிகளது பேச்சுகள்)
Logos( தர்க்கரீதியான வாதம்) : இதில் அரிஸ்ரோட்டில் விரும்பியது தர்க்க ரீதியானவாதம்.
இந்த வெள்ளையானையில் ஜெயமோகன் என்ற கதை சொல்லி மூன்றையும் கையாண்டு இருக்கிறார்.
1870 காலப்பகுதியில் தென் இந்தியாவில் ஏற்பட்ட உணவுப் பஞ்சமும் அதில் தலித் மக்கள் பெரும்தொகையில் இறப்பதையும் அதற்கு மேல்சாதியினர் எப்படி அரசுக்கு உடந்தையாக இருந்தார்கள்? என்பதையும்
வரலாற்றில் வெள்ளையரது ஆதிக்கத்திலும் பார்க்க மேல்சாதியரது கொலைவெறியே தலித் மக்களை மிகவும் பாதித்தது என்றவிடயத்தை தர்க்கமாகவும் அதேவேளையில் செத்துமடியும் மக்களை படிப்பவர் கண்முன்னே ஒரு சுண்ணாம்புச்சுவரின் ஈரலிப்பில் எழுதிய சித்திரமாகவும் இந்நாவலில் கொண்டுவரப்படுகிறது.
இதனால்தான் அரிஸ்;டோட்டலின் மூன்று வழிகளையும் இந்த நாவலில் ஜெயமோகன் கையாளுகிறர் என்றேன்.
இந்த நாவலில் பல இடங்கள் என்னைக் கவர்ந்தது.
ஆங்கிலோ இந்திய விபச்சாரியாக வரும் மரிசா தன்னைத் தேடிவரும் ஏயிடனிடம் ‘அதற்காகவா வந்தாய் என்றால் அதைச் செய்து விட்டுப்போ. போகும்போது எனக்கான ஊதியத்தை அருகில் போட்டுவிட்டுப்போ. அந்தப் பாவப்பணத்தை கொண்டு சென்று தேவாலயத்தின் பஞ்சநிதியில் போடுகிறேன்” என்கிறாள் அந்த சுயமரியாதை கொண்ட விபச்சாரி.
மரிசா ஆரம்பத்தில் ஏயிடனது புறக்கணிப்புகளை பொருட்படுத்தாது அவனைத் தேடிச்செல்லும் விபசாரியாகவும் பின் எயிடன், இந்தியன் ஒருவனின் முதுகில் கால் வைத்தபோது சுயமரியாதை கொண்டு தன்னைத் தேடிவந்த ஆங்கில கப்டனை நிராகரிப்பது அருமையான பாத்திரப்படைப்பு.
அதே போல் தலித் மக்களை அடித்துக் கொல்லும் நீலமேகம் – அதை சரியெனவும், நியாயமான விடயமாகவும் நினைப்பதும், அதற்காக இறக்கவும் துணிவதும் இன்னமும் இந்திய சமூகத்தில் இருக்கும் இயல்பு.
பாரததேசத்தில்; இன்னமும் திவ்வியமாக வீசும் சாதிப்பாகுபாடு என்ற மலவாடையின் பிரதிநிதியாக நிலமேகத்தை காண்கிறேன். நீலமேகம், இந்திய சாதியத்தை உருக்கி வார்த்த மெழுகுப்பொம்மை.
வேறு முக்கியபாத்திரங்கள் இந்த நாவலில் :காத்தவராயன் என்ற படித்த தலித். மற்றவர் ஐஸ் உற்பத்திசாலையின் அமெரிக்க மனேஜர். இவர்களைத்தவிர அதிக பாத்திரஙகள் இல்லை.
நாவலில் வரும் சித்திரிப்பு பெரும்பாலும் ஏயிடனின் உள்மனப் போராட்டமாக இருக்கிறது. இதேவேளையில் நாவலில் வரும் இந்திய உயர்சாதி பாத்திரங்கள் மிகவும் இறுக்கமான மனநிலையுடன் வந்துபோகிறர்கள்.
இப்படி பாத்திரப்படைப்பு காட்சிகளின் சித்திரிப்புக்கு அப்பால் கடந்து செல்லும்போது நவீன ஆங்கில நாவலுக்கான தன்மைகளை பார்க்க முடிந்தது. முதலாவது பந்தியிலே வாசகர்களை உள்ளிலுக்கும் தன்மை அமைந்ததுள்ளது. முதல் அத்தியாயத்திலே முக்கியமான சம்பவம் நடந்து விடுகிறது. இது நாவலுக்குள் எம்மை அறியாமல் ஜெயமோகனது மொழியில் யட்சணிபோல் உள்ளிளுத்துச் செல்கிறது. அதன்பின் நாவலை முடிக்காமல் நாம் வெளிவரமுடியாது.
அரசியல்சார்ந்த சமூக சிந்தனை கொண்டதால் என்னால் இந்த நாவலை அவதானமாக படித்து ரசிக்க முடிந்தது. அத்துடன் புதிய விடயங்களையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
நான் வாசித்த தமிழ்நாவல்களில் இந்தநாவல் பல்வேறு விடயத்தில் புதிய சிந்தனைத் தளத்தை உருவாக்கியுள்ளது மட்டுமல்லாமல் தலித்மக்களின் ஓர்மமான தொடர்ச்சியான போராட்டத்திற்கு, அவர்களது மூதாதையரின் ஆரம்ப போராட்டத்தை இலக்கிய வடிவில் வெளிக்கொணர்வதன் மூலம் ஜெயமோகன் அவர்களது ஆயுத உறையில் புதிதாக தீட்டப்பட்ட போர் வாளை வைத்திருக்கிறார்.
தலித்மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்போல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
நாவலைப் பற்றி எழுதும்போது எனது எண்ணத்தில் காத்தவராயனுடனான ஏயிடனின் சம்பாசணை சில இடங்களில் நீண்டு விட்டதாக தெரிந்து. நான் சந்தித்த பல இராணுவத்தளபதிகள் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கமாட்டர்கள். இடைமறுத்துவிடுவார்கள்.
அக்கால நிலைமைகளையும், குறைகளையும் ஏய்டனுக்கு எடுத்துச் சொல்லும் பாத்திரமாக காத்தவராயன் இருப்பதால் வேறு வழியில்லை என நினைக்கிறேன்.
பதிப்பாசிரியர் கவனத்திற்காக : 276 ஆம் பக்கத்தில் இறுதிப்பந்தியில் ” நாங்கள் இந்தத்தேசத்தின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை திட்டமிட்டிருக்கிறோம்சார்” என்றான் ஏய்டன். இதில் ஏய்டனுக்குப் பதிலாக காத்தவராயன் என இருக்கவேண்டும்

வெள்ளையானையும் பிழைகளும்

ஒருநண்பர், அடிக்கடி அவர் கடிதங்கள் இந்தத் தளத்தில் பிரசுரமாகியிருக்கின்றன, நீண்ட கடிதம் எழுதியிருந்தார். வெள்ளையானை அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்ளவேண்டிய தகவல்பிழைகளைப் பட்டியலிட்டிருந்தார். அப்பிழைகளை அவர் கண்டுபிடிக்கவில்லை. இணையவிவாதங்களில் இருந்து பொதுவாகத் திரட்டியிருந்தார். அடிக்கடி இத்தகைய கடிதங்கள் எனக்கு வருவதுண்டு. பெரும்பாலும் அவை சோர்வையே எழுப்புகின்றன. அரைவேக்காட்டு எதிர்வினைகளை உலகம் முழுக்க உள்ள எழுத்தாளர்கள் சந்திப்பது வழக்கம். அரைக்கால்வேக்காட்டு எதிர்வினைகளைச் சந்திப்பது தமிழிலக்கியவாதியின் தனிப்பட்ட தலையெழுத்து.
நண்பர் சுட்டிக்காட்டிய பிழைகள், ஒன்று வெள்ளையானை நாவலில் இறுதியில் ஒரு விவாதத்தில் ஒரு வெள்ளையானையை பற்றிய குறிப்புவருகிறது. ‘அந்தவெள்ளையானை ஓரு அல்பினோ, அதற்கு உயிரணுக்கள் இருக்காது’ என ஒரு டாக்டர் சொல்வதுபோல. அல்பினோ என்றால் நிறமிக்குறைவு, அது மரபணுப்பிரச்சினையே ஒழிய உயிரணுப்பிரச்சினை அல்ல என்று நண்பர் சொல்லியிருந்தார்.
அல்பினோ என்பது விலங்குகளிலும் மனிதர்களிலும் பறவைகளிலும் காணப்படும் ஒரு மரபுக்குறைபாடு. வெள்ளைப்புலி, வெள்ளையானை போன்றவை இவ்வகைப்பட்டவை இக்குறைபாடுள்ள பெரிய விலங்குகள் சாதாரணமாக குட்டிகளை உருவாக்குவதில்லை. அப்படிப்பட்ட ஓரு வெள்ளையானை திருவிதாங்கூரில் காட்டில் பிடிபட்ட செய்தி பதிவாக்கியிருக்கிறது. அது ஆண்மையற்றதாக இருந்தது.முதலியார் ஆவணங்களிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. ஐரோப்பியர் பதிவுசெய்திருக்கிறார்கள்.அச்செய்தியே நாவலில் பேசப்படுகிறது. அன்று மரபணு என்ற கருதுகோள் இல்லை என்பதனால் விந்துவில் உயிரணு இல்லை என்று அக்கால அறிவியலை டாக்டர் சொல்கிறார். நாவலின் குறியீடாக முக்கியமான வரி இது. மிகக் கவனமாக அமைக்கப்பட்டிருப்பது
நண்பர் சொன்ன இரண்டாம் பிழை. எய்டன் இந்தியாவுக்கு வந்த சிலமாதங்களே ஆன சூழலில் அவன் எப்படி காத்தவராயனைப் பார்த்ததும் ”வைணவராகிய நீங்கள் எப்படி சைவப்பெயருடன் இருக்கிறீர்கள்?’ என்று கேட்கமுடியும், அந்த நுட்பங்கள் எப்படி அவனுக்குத்தெரியும் என்பது.
வெள்ளையரைப்பற்றிய நுட்பமான அவதானிப்பு அந்நாவலில் ஏய்டன் கேட்கும் வினாவில் உள்ளது. இந்தியாவந்ததுமே இந்தியர்களைப்புரிந்துகொள்ள முயலும் வெள்ளையர் முதலில் சென்றுவிழும் இக்கட்டே அதுதான். அவர்கள் சைவத்தையும் வைணவத்தையும் இரு வெவ்வேறு மதங்கள் என புரிந்துகொள்வார்கள். ஒரு சைவத் தந்தைக்கு வைணவப்பெயருள்ள மகன் எப்படி இருக்கமுடியும் என்று புரியவே புரியாது.இந்தியாவில் மிகச்சில சாதிகள் மட்டுமே தெளிவான சைவ வைணவ வேறுபாடு பேணுபவை என்பதை நம் அவர்களுக்குச் சொல்லிப்புரியவைக்கவும் கடினம்.
இன்றுகூட இச்சிக்கலை இங்கு வரும் வெள்ளையர் அடைவதைக் காணலாம். ஒருசில வருடங்களில் அவர்களே தெளிவடைந்துவிடுவார்கள். ஏய்டன் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரும் இந்தியர்களை அறிந்தவன். தொடர்ந்து அறிந்துகொள்ள விவாதித்தபடியே இருப்பவன். ஆனாலும் ஏய்டனுக்கு இந்தியாவைப்பற்றி மேலோட்டமான ஆரம்ப அறிமுகம் மட்டுமே உள்ளது என்பதை காட்டும் நுட்பமான பகுதி அவன் கேட்கும் அந்த பொத்தாம்பொதுவான கேள்வி..
மூன்றாவது பிழையாக நண்பர் சுட்டிக்காட்டியது, ஏய்டன் ‘வெடிகுண்டுமாலையுடன்’ பாய்வதைப்பற்றி யோசிக்கிறான், வெடிகுண்டுமாலை என்பது ராஜீவ்காந்தி கொலையை ஒட்டி உலகில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைப்படை உத்தி அது அக்காலத்தில் ஏது என்பது. என்ன சொல்ல?
துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்தகாலத்திலேயே கையெறிக்குண்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதை தோளில் குறுக்காகப்போடப்பட்ட தோல்பட்டையில் சிறிய கொக்கிகளில் மாட்டிக்கொள்வார்கள். பிரிட்டிஷ் ராணுவத்தில் garland என்றே சொல்லே அதைத்தான் குறிக்கும். ஆங்கிலநாவல்களில் வாசிக்காவிட்டாலும் நம்மூர் கர்ணன் இயக்கிய சினிமாக்களிலாவது கண்டிருக்கலாம். குண்டுமாலையுடன் தற்கொலைத்தாக்குதல் என்பது பிரிட்டிஷார் அராபியமண்ணில் எதிர்கொண்ட முக்கியமான சவாலாக இருந்தது. இவையெல்லாம் அக்கால பிரிட்டிஷ் ஆவணங்கள் மற்றும் போர்க்குறிப்புகளை ஒட்டியே நாவலில் அளிக்கப்பட்டுள்ளன.
இப்படி மொத்தம் பதினெட்டு பிழைகள். பதினெட்டும் வேடிக்கையானவை. ஒருநாவலின் மிகநுட்பமான பகுதி எதுவோ அதையே பிழை என்று புரிந்துகொள்கிறர்கள் என்னும்போது உருவாகும் மனச்சோர்வு சாதாரணமல்ல
பிழைகள் இருக்குமா? கண்டிப்பாக. அறிந்த நேரடி வாழ்க்கையை எழுதும்போதே பிழைகள் இருக்கும். அவற்றைச் சுட்டிக்காட்டும் குறிப்புகள் உதவியானவை. நாவலை மேம்படுத்த அவை உதவும். இன்றையகாந்தி போன்ற நூல்களிலும் வெண்முரசு போன்ற நாவல்களிலும் நண்பர்களால் நிறைய பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்பட்டுள்ளன. எழுதுபவன் அனைத்தையும் அறிந்தவன் அல்ல, கற்றுக்கொண்டிருப்பவனே.ஆனால் கண்டிப்பாக கற்றுக்கொண்டிருப்பவன், தொடர்ந்து வாசிப்பவன், உங்களில் எவரையும்விட. எழுத்தறிவுக்கு அப்பால் தகுதியற்றவர்கள், சோட்டா எழுத்தாளர்கள் எல்லாம் திருத்தம் சொல்லும் அளவுக்கு என் நூல்கள் இருப்பதில்லை என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பிழைகள் என தோன்றுபவை உண்மையில் பிழைகளாக இருக்குமா என இன்னொரு முறை உறுதிசெய்துகொள்ளுங்கள் என்று நண்பர்களை கோருகிறேன். நூல்களில் ஆவணங்களில் சரிபாருங்கள். நீங்கள் அனைத்து எழுத்தாளர்களை விடவும் மேலான பிறவிமேதையாக, எதையும் வாசிக்காமலேயே அனைத்தையும் அறிந்து உலகையே திருத்திச்சொல்லும் தகுதிகொண்ட மெய்ஞானியாக இருப்பதற்கான வாய்ப்புண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதை பொருட்படுத்தும்படி எழுதிக்காட்டுங்கள் .
நண்பர்களுக்கு, இப்படி தகவல்பிழைகள் அல்லது முரண்பாடுகள் சுட்டிக்காட்டப்படும்போது அவற்றைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை என்றால் அவற்றை நான் முழுமையான அசட்டுத்தனங்கள் என புறக்கணித்துவிட்டேன் என்றே பொருள். இணையத்தில் வெளிப்படும் அனைத்து உளறல்களுக்கும் என்னிடம் பதிலை எதிர்பார்த்து கடிதமெழுதாதீர்கள்

கொல்லும் வெள்ளையானை -மதி

ஐஸ் ஹவுஸ் என்று சென்னையில் இருக்கின்ற இடத்திற்குப் பின்னால் இப்படி ஒரு உறைய வைக்கும் வரலாறு இருக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை. 1875 வாக்கில் இந்த மாகாணத்தில் லட்சக்கணக்கானோர் பலியான ஒரு பஞ்சம் நிகழ்ந்திருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. அப்புராணியாக இருக்கும் ஐஸ் கட்டிகள் அளவில் பெரியதானால் இவ்வளவு பயங்கரமான மிருகமாக மாற முடியும் என்று நான் உணர்ந்ததில்லை. அடிமை நிலையில் பஞ்சம் என்பது இத்தனை கொடூரமானது என்று எனக்கு இதுவரை தெரிந்ததில்லை. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தன்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப் பார்ப்பதைத் தவிர்க்க இயலாது என்று முன்னுரை எச்சரிக்கிறது. நிஜம் தான்!


1875 வாக்கில் தென்னிந்தியாவை மாபெரும் பஞ்சம் ஒன்று பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த வேளையில் சென்னையில் அதன் கோரத்தின் ஓரங்களை வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு கிடைத்த ஓர் ஆங்கிலேய அதிகாரியின் பார்வையில் சொல்லப்பட்டு இருக்கும் கதை. தன்னால் இந்தக் கோரத்தை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறதே என்ற உறுத்தலுடன் வாழும் அதிகாரி அவர். தன்னால் இயன்ற அளவு இந்த மனிதாபிமானமற்ற கொடுமைகளைத் தடுக்க முனைகிறார். ஆனாலும் அவருக்குள்ளும் ஆளும் வர்க்கத்தின் அகந்தையை ஊட்டி விட்டிருப்பதன் பாதிப்பு ஆங்காங்கே தெறித்து வெளி வருகிறது. ஆங்கிலேயர்கள், உயர்சாதி இந்தியர்கள், அடிமை இந்தியர்கள் என்று சமுதாயம் மூன்றாகப் பிரிந்திருந்த காலம். கதையைப் பற்றி மேலும் நான் சொல்ல வில்லை. வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் 'வெள்ளை யானை' என்ற பெயர்த் தேர்வு. யானையைப் பற்றி எழுதினாலும் சரி, யானையை ஒரு உருவகமாக எழுதினாலும் சரி, ஜெயமோகன் சிலிர்க்க வைத்து விடுகிறார். அயல் நாட்டின் ஏதோ ஓர் ஏரியில் உறைந்து கிடந்த பிரம்மாண்டப் பனி மிருகத்தைத் தூக்க மருந்துகள் கொடுத்துப் பெயர்த்து எடுத்து, உறக்கத்திலேயே அதை ஓர் வெப்ப நாட்டுக்குக் கொண்டு வந்து வியர்வையில் உருகச் செய்து வெறியேற்றி விட்டால் கண்மண் தெரியாமல் கொல்லத்தானே செய்யும். ஐஸ் ஹவுஸிற்கு வந்திறங்கி இருக்கும் பனிக்கட்டியை முதல் முறை விவரித்து அதை ஒரு மதம் பிடித்த யானையோடு ஒப்பிடச் செய்யும் இடத்தில் புதினம் நம்மை நிமிர்ந்து அமரச் செய்து விடுகிறது. கத்தாமல், முறைக்காமல், குதிக்காமல் வெறும் இருப்பின் மூலம் மட்டுமே எதிரில் நிற்பவரை முதுகு உறையப் பயப்பட வைக்கும் சக்தி யானைக்கும் அந்தப் பனிப்பாறைக்கும் இருந்திருக்கிறது. அந்த விவரிப்பிற்கு மட்டுமே பல முறை மரியாதை செலுத்தலாம்.

இந்த நாட்டையும் இதன் மக்களையும் புரிந்து கொள்ள ஏய்டன் (அந்த ஆங்கிலேய அதிகாரி) எடுக்கும் முயற்சிகளால் இந்தச் சமூகம் எவ்வளவு சிக்கலாகக் கிடந்திருக்கிறது என்று புரிகிறது. ஒரு வகையில் ஒரு அற்ப மனிதனின் அங்குசத்திற்குப் பயந்து அடங்கிக் கிடக்கும் யானையைப் போலத்தான் நம் நாடும் இருந்திருக்கிறது. ஊர் ரெண்டுபட்டாலே கூத்தாடிக்குக் கொண்டாட்டம். நம்மை ஆண்ட கூத்தாடி இந்த ஊர் எத்தனையாகப் பிரிந்து கிடக்கிறது என்று கணக்கிடவே சம்பளத்திற்கு ஆளமர்த்தி இருக்கிறான் என்றால் நாம் இருந்த லட்சணம் அப்படி! இப்போது முன்னேறி இருக்கிறோம். முழுமையாக மாறி இருக்கிறோமா ? நம்மை ஆண்டு கொண்டிருந்தாலும் நம்மைக் கண்டு உள்ளூரப் பயந்து கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். இந்த மிருகம் எப்போது தன்னிலை உணருமோ அப்போது நம் கதை முடியும் என்று தெரிந்தே ஒரு நூற்றாண்டு நம்மை ஆண்டிருக்கிறார்கள்.

அந்தக் காலகட்டத்தில் நம் நாட்டில் விளைவித்த தானியத்தை எல்லாம் ஏற்றுமதி செய்து விட்டு, உள்ளூர் மக்களைப் பஞ்சத்தில் சாக விட்டு, அதன் பின் பஞ்சத்தில் சாகிறவர்களுக்காகப் பரிதாப அடிப்படையில் சொற்பக் கூலிக்கு வேலை தந்து, அந்த உழைப்பை உறிஞ்சி மாட மாளிகைகளும் நெடுஞ்சாலைகளும் கட்டியிருக்கிறார்கள். உழைக்கத் திராணியற்றவர்கள் உடனே சாக வேண்டியதுதான். உழைப்பவர்களும் கொஞ்சம் பொறுமையாகச் சாக வேண்டியதுதான். இத்தனை ரத்தத்தையும் உறிஞ்சிக் குடித்த வாய்கள் ரத்தச் சுவையை மறந்து மது குடிப்பதற்காகத் தான் அந்தப் பனிக்கட்டிகள்!

இதற்கு முன் 'காடு' புதினம் படிக்கையில் குறுந்தொகை பாடிய கபிலரை அறிமுகம் செய்து வைத்த மாதிரி இந்தப் புதினத்தில் ஷெல்லியை அறிமுகம் செய்து வைக்கிறார் ஜெமோ. கவிதையைப் புரிந்து கொள்ள இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு மன நிலைக்கும் ஒரு கவிஞன் முன்பே வரிகளைச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். சமயத்தில் அவனை நினைவு கூறத் தக்கவர்கள் எப்பேற்பட்ட பாக்கியசாலிகள் என்ற உணர்வு இந்தக் கதாபாத்திரங்களைப் படிக்கிறபோது வருகிறது.

ராயபுரத்தில் இருந்து செங்கல்பட்டிற்குச் செல்லும் ஒரு பயணம் புதினத்தில் வருகிறது. பஞ்சம் என்றால் என்ன என்று உணர்ந்து கொள்ள ஏய்டன் ஒரு குதிரை வண்டியில் செங்கல்பட்டிற்குச் செல்கிறான். அந்தப் பயணம் முழுக்கப் பேரதிர்ச்சியைத் தரக் கூடிய விவரிப்பு. சாலையோரம் நெடுகக் கிடக்கும் பிணங்களை நாய்கள் கடித்து இழுத்துத் தின்னும் காட்சிகள் நிறைந்த பக்கங்கள். உயிர் கொஞ்சம் எஞ்சியிருந்தாலும் பொறுமை இழந்த நாய்கள் அப்படியே வயிற்றைக் கிழித்துக் குடலை உண்ணும் கோரங்கள். சாவின் விளிம்பில் இருக்கும் ஒவ்வொரு உயிரின் கண்ணிலும் பயமுறுத்தக்கூடிய வெறுமையை உணர முடியும். செத்தவர்கள் போக, பிச்சை கேட்கத் தெம்புள்ளவர்கள் கூட்டம் கூட்டமாகச் சாலை ஓரங்களில் நின்று பிச்சை கேட்கிறார்கள். இரக்கப்பட்டு உணவு கொடுத்தாலும் அதைச் செரிக்கத் திராணி இல்லாமல் தொண்டை அடைத்துச் செத்துப் போகப் போகிறவர்கள். பசிக்கும் பஞ்சத்துக்கும் உள்ள வித்தியாசம் பனிக்கட்டியில் கையை வைத்தாற்போல் உணரக் கூடிய பக்கங்கள் அவை. ஒரு கட்டத்தில் கூட்டத்தைத் தாண்டிச் செல்ல, வண்டிக்கு முன் வந்து மன்றாடி விழும் மனிதர்களைச் சக்கரத்தில் ஏற்றிச் செல்ல வேண்டிய நிலை. சக்கரத்தில் மாட்டிக் கொண்டவர்கள் எவரும் நசுங்குவதில்லை. உடைகிறார்கள்! நசுங்கிச் சாகக் கூடச் சொற்ப அளவுக்குச் சதை இருக்க வேண்டுமே உடலில். சக்கரத்தில் எலும்புகள் உடையும் சத்தம் நிச்சயம் சில இரவுகள் உங்களைத் தூங்க விடாது. அப்போதும் கூட எலும்புகள் உடையும் சத்தம்தான் கேட்கும். சாகிறவர்கள் எவரும் ஓலமிடுவதில்லை. அடிமைகள் அமைதியாகத் தான் சாக வேண்டும்.

அந்தச் சமூகத்தில் விடியலுக்கு வழி தேடி ஒரு முதல் குரல் அடிமை வர்க்கத்தின் உள்ளிருந்து வெளிவரும் ஒரு சந்தர்ப்பமும் அது முளையிலேயே உடைக்கப்படுவதும் அதைச் சாட்சியாக இருந்து பார்த்து இயலாமையில் துவண்டு மனம் விட்டுப் போகும் ஏய்டன் அப்புறம் என்னவாகிறான் என்றும் கதை முடிகிறது.

சகமனிதன் தன்னை விடக் கீழானவன் என்று எண்ணும் வெறி, தனக்குத் தானே செய்து கொள்ளும் கற்பிதங்கள் இந்தப் புத்தகத்தில் தோலுரித்துக் காட்டப் படுகின்றன. நிச்சயமாக மனதில் கொஞ்சமேனும் குற்ற உணர்ச்சி இருந்தால் அதைச் செய்ய முடியாது. முழுக்க முழுக்க மனப்பூர்வமாக தன் உயர் நிலையை நம்பினால் மட்டுமே கீழானவன் சாவது நியாயம் என்று உணர முடியும். அவனைக் கொன்று விட்டுக் கூசாமல் உணவு உண்ண முடியும். இந்த நம்பிக்கைகளை வெள்ளையர்கள் கொண்டிருந்ததை விட நம் நாட்டு மேல்வர்க்கம் கொண்டிருந்ததுதான் குரூரமாகத் தெரிகிறது. இவர்களின் சந்ததி என்று உணர்கையில் கூசுகிறது. இங்கே சாகிற சாதியினரும் கூடத் தங்கள் மீட்பர் வெள்ளைத் தோல் உடுத்தித் தான் வருவார் என்று நம்பும் அளவுக்குக் கொடூரமாக இருந்திருக்கிறார்கள். அத்தனை கொடூரத்தையும் உள்ளுக்குள் மறைத்துக் கௌரவமாக வாழ்ந்திருக்கிறார்கள். சே!

கொல்கிறவர்களும் சாகிறவர்களும் அதைத் தங்கள் கடமை போல் வலியின்றி ஏற்றுக் கொண்டு போகும் ஒரு நாட்டில் இதனை வேடிக்கை பார்ப்பவன் பெறும் வலிதான் ஏய்டனுக்கும் நமக்கும் வருகிறது.

- மதி
http://sunshinesignatures.blogspot.in/2014/06/blog-post_7528.html