Tuesday, July 8, 2014

யாவோ இல்லாத வேதாகமம்- நோயல் நடேசன்

தமிழ்நாட்டு நாவல்களின் கருப்பொருள்கள் எழுத்தாளனால் தன்னை சுற்றிய நிகழ்கால புறச்சூழலில் இருந்து எடுத்தாளப்படுகிறது. அது குறைபாடானது அல்ல. ஆனாலும் ஒரு எழுத்தாளன் தான் சார்ந்த சாதி, பின்பற்றும் கருத்தியற்கோட்பாடு, தனது பிரதேசம் எனத் தன்னைச் சுற்றி இலச்சுமணனின் கோடு போல் போட்டு விட்டு, சீதையைப்போல் அல்லாது, மீறாது நல்ல பிள்ளைகளாக உள்ளிருந்து இலக்கியம் படைக்கும் பொழுது அந்த இலக்கியத்தின் ஆயுட்காலம் குறைந்து விடுகிறது.
அதேபோல் நமது ஈழத்தவர்கள் இலக்கியமும் போருக்கு முன்பு, மார்க்சிய முற்போக்குவாதம் : பின்பு தமிழ்த்தேசியம் என புறநானூறு பேசி: இப்பொழுது போர் அழிவுகள் நடந்த பின் கண்ணீர்த் துளியின் உட்பரப்புக்குள் அல்லது நத்தை தனது கூட்டுக்குள் அடங்குவது போல் அடங்கிவிடுகிறது.
புறக்கோட்பாட்டு விடயங்களில் இலக்கியம் நின்று விடுகிறது. இதுவும் தவறு அல்ல. ஆனால் இந்த புறச்சூழல் மாற்றமடையக்கூடியது. காரில்போகும் போது நுகரும் சாக்கடைவாசம் போல நம்மைக் கடந்து செல்லக்கூடியது: வரலாற்று நெடுஞ்சாலையில் சாதாரணமான மைல் கற்கள்.
தமிழ்த்தேசியத்தை வைத்து இலக்கிய பேச தற்போது இலங்கையில் முடியாது. அதேபோல் மாக்சிய முற்போக்கு இலக்கியவாதிகள் யாராவது இக்காலத்தில் இருந்தால் டயனோசரை மியூசியத்தில் பாரப்பதற்குச் சமனானது.
அக உணர்வுகளையும் அகஉணர்வின் கட்டுடைப்புகளையும் அல்லது மனித மனத்தின் விளிம்புகளில் அல்லது பிறள்வுகளில் நின்று அடிப்படையாக பேசிய நாவல்கள் நிரந்தரமானவை. ஆனால் அவை நமது இலக்கிய வெளியில் அதிகம் பயிரிடப்படாதவை அல்லது ஆங்காங்கு இடைக்கிடை கண்ணுக்கு தென்படுபவை.
அதன் காரணம் என்ன?
நான் நினைக்கிறேன் – மேற்கு நாட்டில் கலாச்சார சிந்தனை வளர்ச்சியோடு கலைகளும் வளர்ந்தது. இலக்கியம், ஓவியம், கட்டடிடக்கலை என்று ஆரம்பகாலத்தில் இருந்து பல வடிவங்களில் பரிணாமமடைந்துள்ளது. மேற்குநாட்டில் இலக்கிய தத்துவம், அல்லது ஓவிய வரலாறு எனும்போது அங்கே ஒரு பரிணாமவளர்ச்சி ஏற்பட்டது.
இந்த நுண்ணியல் துறைகள் அவர்கள் கலாச்சாரம், சமூகபொருளாதாரத்தை ஒட்டி வளர்ந்தன.
எமது தமிழ் சமூகத்தில் விஞ்ஞானத்தின் மகசூலை ஏகே 47 அல்லது கணினி என அனுபவித்தாலும் – சமூகத்தின் சிந்தனையில் மாற்றம் மயிர்க்குட்டி இலைக்கு இலை செல்லும் வேகத்திலே நடக்கிறது.
நிலஉடமை சமூகத்தின் பொருளாதாரத்தை நிலைநாட்ட ஏற்பட்ட கூறுகள் கைவிலங்குகளாக எமது சிந்தனையோட்டத்திற்கு அணை போடுகிறது. இன்னமும் உள்ளக இனவிருத்தி எனும் (incest) தாய்மாமனை திருமணம் செய்வதும், சீதனத்திற்கான கொலை மற்றும் சாதியக் கட்டுப்பாட்டை மீறியதற்காக சொந்தப் பிள்ளைகளைக் காவு கொடுக்கும் சமூகத்தில் புதிய சிந்தனைகள் என்பது நரிக்குறவர்கள் கைகளில் கிடைத்த வானொலி போன்றது.
“பாட்டைக் கேட்டபடி காக்கை குருவி சுடுவது போல.”
ஜெயமோகனின் வெள்ளையானை இந்தியாவுக்கு சமீபத்தில் விடுமுறையில் சென்றவேளை முதல்நாளில் படிக்கத் தொடங்கியது. பின்பு கொழும்பில் விமானச்சக்கரம் வெளியே வந்து தடால் என்ற அதிர்வுடன் தரையிறங்கும்போது கடைசி பக்கத்தை படித்து முடித்தேன்.
தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகம் முழுவதும் செறிந்து வாழும் தமிழ்ப்பேசும் தமிழ்ப்பேசாத, தமிழர்கள் வரலாறு எப்படி தொடங்குகிறது என்பதை விளக்கும் ஒரு வரலாற்றுப் புனைவு.என்னை மலையில் இருந்து வரும் புதுப்புனலாக நெஞ்சில் தாக்கியது.
தமிழகத்தில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால் வெளியேறிய தலித் மக்களே இன்று இலங்கையின் மலையகம், மலேசியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகளில் வாழும் பெரும்பான்மைத் தமிழர்கள். இவர்களது வரலாற்றின் தொடக்கப்புள்ளிதான் வெள்ளையானை. ஒருவிதத்தில் பபிலோனியாவிற்கு கடத்தப்பட்டு சென்ற யூதமக்களே தங்கள் வரலாற்றை பழைய ஏற்பாடாக எழுதியதாக தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் சொல்வதுபோல், இந்தத் தமிழர்களின் வெளியேற்றத்தின் சரித்திரம் இதில் உண்டு.
இந்த நாவலில் சிறப்புகளில் முக்கியமானது கதையில் அன்னிய தேசத்தவனான ஏய்டன் என்ற இராணுவ காப்டனை கதாநாயகனாக வைத்து அவனது மன உணர்வில் கதையை சொல்லுவுது. இது மிகவும் கடினமான விடயம். இருபத்தைந்து வருடங்களாக அவுஸ்திரேலியாவில் மேற்கு நாட்டு அனுபவத்தில் வாழ்ந்து வரும் நான், ஏதாவது இடத்தில் மிகைப்படுத்தியோ குறைவாகவோ சொல்லப்பட்டிருக்கிறதா என அவதானமாக பார்த்தேன்.
காணமுடியவில்லை.
பிரித்தானிய சாம்ராச்சியத்தின் ஒரு அங்கத்தவராக இருந்து கொண்டு ஷெல்லியின் கவிதை வரிகளில் சிக்கிக்கொண்டு கனவுலகத்தில் தனக்கான அறஉணர்வை உருவாக்க விரும்பும் ஒர் இராணுவ வீரனை மிகத் தெளிவாக சித்திரித்திருக்கிறார். நிகழ்காலத்தில் அதே அற உணர்வுடன் சஞ்சரிக்கும் பல மேல்நாட்டு இளைஞர்கள், யுவதிகள் பல சமூகநல நிறுவனங்களில் கடமையாற்றுகிறவர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
செங்கல்பட்டு மாவட்ட பஞ்சத்தின் பாதிப்பு சித்திரிக்கப்படுவது என்னை மனம் கலங்கி பல இடத்தில் புத்தகத்தை நிறுத்த வைத்தது. பஞ்சத்தில் மக்கள் தெருத்தெருவாக மரணமாகும் காட்சி, என் கண்களை கலங்க வைத்தது. வாசிப்பை நிறுத்தி கண்களைத் துடைத்து விட்டு சில நிமிடங்களின் பின்னேதான் தொடரமுடிந்தது.
கிரேக்க அறிஞரான அரிஸ்ரோட்டில் ஒரு கதைசொல்லியோ அல்லது மேடைப்பேச்சாளனே பின்வருவனவற்றில் உள்ள மூன்றில் ஒன்றைக் கையாளவேண்டும் என்றார்.
Ethos (சொல்பவனது தரம்: அதாவது ஒரு தத்துவஞானியின் கருத்து)
Pathos, (கேட்பவர்களின் உணர்வைத் துண்டுதல் : அரசியல்வாதிகளது பேச்சுகள்)
Logos( தர்க்கரீதியான வாதம்) : இதில் அரிஸ்ரோட்டில் விரும்பியது தர்க்க ரீதியானவாதம்.
இந்த வெள்ளையானையில் ஜெயமோகன் என்ற கதை சொல்லி மூன்றையும் கையாண்டு இருக்கிறார்.
1870 காலப்பகுதியில் தென் இந்தியாவில் ஏற்பட்ட உணவுப் பஞ்சமும் அதில் தலித் மக்கள் பெரும்தொகையில் இறப்பதையும் அதற்கு மேல்சாதியினர் எப்படி அரசுக்கு உடந்தையாக இருந்தார்கள்? என்பதையும்
வரலாற்றில் வெள்ளையரது ஆதிக்கத்திலும் பார்க்க மேல்சாதியரது கொலைவெறியே தலித் மக்களை மிகவும் பாதித்தது என்றவிடயத்தை தர்க்கமாகவும் அதேவேளையில் செத்துமடியும் மக்களை படிப்பவர் கண்முன்னே ஒரு சுண்ணாம்புச்சுவரின் ஈரலிப்பில் எழுதிய சித்திரமாகவும் இந்நாவலில் கொண்டுவரப்படுகிறது.
இதனால்தான் அரிஸ்;டோட்டலின் மூன்று வழிகளையும் இந்த நாவலில் ஜெயமோகன் கையாளுகிறர் என்றேன்.
இந்த நாவலில் பல இடங்கள் என்னைக் கவர்ந்தது.
ஆங்கிலோ இந்திய விபச்சாரியாக வரும் மரிசா தன்னைத் தேடிவரும் ஏயிடனிடம் ‘அதற்காகவா வந்தாய் என்றால் அதைச் செய்து விட்டுப்போ. போகும்போது எனக்கான ஊதியத்தை அருகில் போட்டுவிட்டுப்போ. அந்தப் பாவப்பணத்தை கொண்டு சென்று தேவாலயத்தின் பஞ்சநிதியில் போடுகிறேன்” என்கிறாள் அந்த சுயமரியாதை கொண்ட விபச்சாரி.
மரிசா ஆரம்பத்தில் ஏயிடனது புறக்கணிப்புகளை பொருட்படுத்தாது அவனைத் தேடிச்செல்லும் விபசாரியாகவும் பின் எயிடன், இந்தியன் ஒருவனின் முதுகில் கால் வைத்தபோது சுயமரியாதை கொண்டு தன்னைத் தேடிவந்த ஆங்கில கப்டனை நிராகரிப்பது அருமையான பாத்திரப்படைப்பு.
அதே போல் தலித் மக்களை அடித்துக் கொல்லும் நீலமேகம் – அதை சரியெனவும், நியாயமான விடயமாகவும் நினைப்பதும், அதற்காக இறக்கவும் துணிவதும் இன்னமும் இந்திய சமூகத்தில் இருக்கும் இயல்பு.
பாரததேசத்தில்; இன்னமும் திவ்வியமாக வீசும் சாதிப்பாகுபாடு என்ற மலவாடையின் பிரதிநிதியாக நிலமேகத்தை காண்கிறேன். நீலமேகம், இந்திய சாதியத்தை உருக்கி வார்த்த மெழுகுப்பொம்மை.
வேறு முக்கியபாத்திரங்கள் இந்த நாவலில் :காத்தவராயன் என்ற படித்த தலித். மற்றவர் ஐஸ் உற்பத்திசாலையின் அமெரிக்க மனேஜர். இவர்களைத்தவிர அதிக பாத்திரஙகள் இல்லை.
நாவலில் வரும் சித்திரிப்பு பெரும்பாலும் ஏயிடனின் உள்மனப் போராட்டமாக இருக்கிறது. இதேவேளையில் நாவலில் வரும் இந்திய உயர்சாதி பாத்திரங்கள் மிகவும் இறுக்கமான மனநிலையுடன் வந்துபோகிறர்கள்.
இப்படி பாத்திரப்படைப்பு காட்சிகளின் சித்திரிப்புக்கு அப்பால் கடந்து செல்லும்போது நவீன ஆங்கில நாவலுக்கான தன்மைகளை பார்க்க முடிந்தது. முதலாவது பந்தியிலே வாசகர்களை உள்ளிலுக்கும் தன்மை அமைந்ததுள்ளது. முதல் அத்தியாயத்திலே முக்கியமான சம்பவம் நடந்து விடுகிறது. இது நாவலுக்குள் எம்மை அறியாமல் ஜெயமோகனது மொழியில் யட்சணிபோல் உள்ளிளுத்துச் செல்கிறது. அதன்பின் நாவலை முடிக்காமல் நாம் வெளிவரமுடியாது.
அரசியல்சார்ந்த சமூக சிந்தனை கொண்டதால் என்னால் இந்த நாவலை அவதானமாக படித்து ரசிக்க முடிந்தது. அத்துடன் புதிய விடயங்களையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
நான் வாசித்த தமிழ்நாவல்களில் இந்தநாவல் பல்வேறு விடயத்தில் புதிய சிந்தனைத் தளத்தை உருவாக்கியுள்ளது மட்டுமல்லாமல் தலித்மக்களின் ஓர்மமான தொடர்ச்சியான போராட்டத்திற்கு, அவர்களது மூதாதையரின் ஆரம்ப போராட்டத்தை இலக்கிய வடிவில் வெளிக்கொணர்வதன் மூலம் ஜெயமோகன் அவர்களது ஆயுத உறையில் புதிதாக தீட்டப்பட்ட போர் வாளை வைத்திருக்கிறார்.
தலித்மக்களுக்கு யாவோ இல்லாத பழைய வேதாகமம்போல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.
நாவலைப் பற்றி எழுதும்போது எனது எண்ணத்தில் காத்தவராயனுடனான ஏயிடனின் சம்பாசணை சில இடங்களில் நீண்டு விட்டதாக தெரிந்து. நான் சந்தித்த பல இராணுவத்தளபதிகள் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கமாட்டர்கள். இடைமறுத்துவிடுவார்கள்.
அக்கால நிலைமைகளையும், குறைகளையும் ஏய்டனுக்கு எடுத்துச் சொல்லும் பாத்திரமாக காத்தவராயன் இருப்பதால் வேறு வழியில்லை என நினைக்கிறேன்.
பதிப்பாசிரியர் கவனத்திற்காக : 276 ஆம் பக்கத்தில் இறுதிப்பந்தியில் ” நாங்கள் இந்தத்தேசத்தின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தத்தை திட்டமிட்டிருக்கிறோம்சார்” என்றான் ஏய்டன். இதில் ஏய்டனுக்குப் பதிலாக காத்தவராயன் என இருக்கவேண்டும்

No comments:

Post a Comment